மதுரை: மதுரை மானகிரி பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் செல்வகுமார் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட மானகிரி பகுதியில் அனைத்து சமூக மக்களும் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் மானகிரி கண்மாய் மற்றும் நீர்வரத்து வாய்க்காலும் உள்ளது.
இந்த மானகிரி கண்மாய் மிகவும் பழமையான கண்மாய். தற்போது இந்த கண்மாய் இப்பகுதியைச் சேர்ந்தவர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இதுபோல செல்லூர் பகுதியில் இருந்து வரக்கூடிய நீர் வரத்து வாய்க்கால் முழுமையாக ஆக்கிரமிப்பு செய்து, கட்டடங்களும் கட்டப்பட்டுள்ளன.
இதே போல, அரசுக்கு சொந்தமான 54 சென்ட் அரசு புறம்போக்கு நிலத்தை தனிநபர்கள் ஆக்கிரமித்து மாட்டுக் கொட்டங்கள் அமைத்து, தங்களது வளர்ப்பு மாடுகளை கட்டி வருவதால், சுகாதார சீர்கேடும் ஏற்படுத்தி வருகின்றனர்.
ஆகவே, மதுரை மாநகராட்சி மற்றும் பொதுப்பணி துறையினர் கண்மாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். இதுமட்டும் அல்லாது, அரசு புறம்போக்கு நில ஆக்கிரமிப்புகளை அகற்றி அரசு நிலத்தில் அரசு ஆங்கில வழி ஆரம்பப் பள்ளியை ஆரம்பிக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு மனு அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இதையும் படிங்க: ஜெயலலிதா தோழிக்கு சிறை? நில அபகரிப்பு வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு!
எனவே, மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட மானகிரி கண்மாய் மற்றும் நீர்வரத்து வாய்க்கால் உள்ளிட்ட நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரம்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" என்று அந்த மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் மற்றும் நீதிபதி புகழேந்தி ஆகியோர் அடங்கிய நீர்நிலை ஆக்கிரமிப்பு குறித்து விசாரிக்கக் கூடிய சிறப்பு அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.
அப்போது விசாரணை மேற்கொண்ட நீதிபதிகள், "மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட மானகிரி பகுதியில் உள்ள மானகிரி கண்மாய் மற்றும் நீர்வரத்து வாய்க்கால் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை மூன்று மாதத்தில் அகற்ற வேண்டும்" என்று மதுரை மாநகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை முடித்து வைத்தனர்.