மதுரை: மதுரை மாநகராட்சி 62வது வார்டு சுயேச்சை கவுன்சிலர் ஜெயச்சந்திரன், உயர் நீதிமன்றம் மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், "கடந்த இரண்டரை ஆண்டுகளாக எந்த ஒரு அரசியல் கட்சி சாராத சுயேச்சை கவுன்சிலராக செயல்பட்டு வருகிறேன். கடந்த ஜூன் 28ஆம் தேதி நடந்த மதுரை மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் பங்கேற்ற நான் ஒவ்வாத வார்த்தைகளை பயன்படுத்தியதாகக் கூறி, என்னை இடைநீக்கம் செய்தனர்.
என் மீதான குற்றச்சாட்டுகளுக்கு உரிய விளக்கம் அளிக்க வாய்ப்பு கொடுக்கவில்லை. இது சட்ட விரோதம், எனவே, என்னை இடைநீக்கம் செய்ததை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு இன்று (செவ்வாய்க்கிழமை) விசாரணைக்கு வந்தது.
அப்போது மாநகராட்சி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மாநகராட்சி சட்ட விதிகளுக்கு புறம்பாக மனுதாரர் மாமன்றக் கூட்டத்தில் பேசியதால், அவர் மீது நேரடியாக சட்ட விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என வாதாடினார். பின்னர் மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், "மாநகராட்சி விதிகளின்படி மாமன்றக் கூட்டத்தில் அமைதியை சீர்குலைக்கும் வகையில் நடந்தால் முதல் முறையாக எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்ப வேண்டும்.
மீண்டும் அதை மீறி செயல்பட்டால் மட்டுமே வெளியேற்ற நடவடிக்கை அல்லது இடைநீக்கம் செய்யப்பட வேண்டும் என விதிகள் கூறுகின்றன. இதை மீறி முதல் முறையே நேரடியாகவே மனுதாரர் மீது நடவடிக்கை எடுத்தது சட்டவிரோதம்" என வாதாடினார். விசாரணை முடிவில், மனுதாரர் விளக்கம் அளிக்க வாய்ப்பு அளிக்காமல் நேரடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே, அவரை இடைநீக்கம் செய்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது என நீதிபதி உத்தரவிட்டார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: பழனி கோயில் ஆக்கிரமிப்புகள் அகற்ற கோரிய வழக்கு; மாவட்ட ஆட்சியர் தரப்பில் அறிக்கை தாக்கல்!