மதுரை: மதுரையைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அந்த மனுவில் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டில் ஒன்றான கிடா முட்டு விளையாட்டானது வருடம் தோறும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும். கிடாக்களை முறையான பயிற்சி செய்து கிடா முட்டு விளையாட்டிற்கு தயார் செய்வார்கள். அந்த வகையில் மதுரை உசிலம்பட்டி அருகே உள்ள வாலாந்தூர் கிராமத்தில் அங்காள பரமேஸ்வரி கோயில் திருவிழாவை முன்னிட்டு வருகிற மே 16ஆம் தேதி கிடா முட்டு விளையாட்டு நடத்த உள்ளோம்.
இது குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி கேட்டு விண்ணப்பிக்கப்பட்டது. இதுவரை அனுமதி கொடுக்கவில்லை. எனவே உரிய விதிகளைப் பின்பற்றி கிடா முட்டு விளையாட்டு நடத்துவதற்கு அனுமதிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு இன்று நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்த போது, கிடா முட்டு விளையாட்டிற்கான விதிகளைப் பின்பற்றி உரியப் பாதுகாப்பு வசதிகளை உறுதி செய்து அனுமதி வழங்க மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் உசிலம்பட்டி தாசில்தாருக்கு உத்தரவிட்ட நீதிபதி, மேலும் அதிகாரிகள் வகுக்கும் விதிகளை உரிய முறையில் பின்பற்ற மனுதாரருக்கு உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: கோவை தொகுதியில் மீண்டும் தேர்தலா? - உயர் நீதிமன்றம் நாளை விசாரணை! - Lok Sabha Election 2024