சென்னை: சென்னை மாவட்டத்தில் உள்ள தென்சென்னை, மத்திய சென்னை, வடசென்னை நாடாளுமன்றத் தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அடங்கிய மின்னணு வாக்குப்பெட்டி இயந்திரங்களைப் பாதுகாப்பாக வைப்பதற்கான அறைகள் தயார் நிலையில் உள்ளது. மேலும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்படும் அறையில் ஜன்னல்கள், கதவு உள்ளிட்ட அனைத்தும் மரப்பலகையால் அடைக்கப்பட்டு, சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளன.
மேலும், வாக்குப்பதிவு இயந்திரங்களை 24 மணி நேரமும் துணை ராணுவப்படையினர், காவல்துறையினர் கண்காணிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மேலும், வேட்பாளர்களின் முகவர்கள் கண்காணிப்பதற்காக அவர்கள் தங்குவதற்குத் தேவையான அனைத்து வசதிகளும் ஏற்படுத்தி தரப்பட்டுள்ளன.
சென்னை மாவட்டத்தில் உள்ள தென்சென்னை, மத்திய சென்னை, வட சென்னை ஆகிய 3 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் நாளை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், சென்னை மாவட்டத்தில் உள்ள 3,726 வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவிற்குத் தேவையான 11 ஆயிரத்து 843 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 4,469 கட்டுப்பாட்டுக் கருவிகள், 4,842 வாக்காளர் சரிபார்க்கும் காகிதத் தணிக்கை சோதனைக் கருவிகள் (VVPAT) உள்ளிட்ட இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளன.
மேலும், சென்னையில் உள்ள 3,726 வாக்குச்சாவடிகளில் பணிபுரிய 299 செக்டார் மெஜிஸ்ரேட் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ஜிபிஎஸ் பொருத்தப்பட்ட வாகனங்களில் காவல்துறை கண்காணிப்பில் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையங்களுக்குத் தேவையான பொருட்களைப் பிரித்தெடுத்து வழங்குவர்.
ஒரு செக்டார் மெஜிஸ்ரேட்டுக்கு 8 முதல் 12 வாக்குச்சாவடி மையங்கள் வழங்கப்பட்டுள்ளது. வாக்குச்சாவடி மையங்களில் பணிபுரியவுள்ள 19 ஆயிரத்து 419 வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான மூன்றாம் கட்ட பயிற்சி வகுப்புகள் 16 சட்டமன்றத் தொகுதிகளிலும் சமீபத்தில் நடைபெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
வாக்காளர்கள் எண்ணிக்கை: தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதி செங்கல்பட்டு மாவட்டத்தில் வருகிறது. இந்தத் தொகுதியில் 663 வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதியில் 20 லட்சத்து 23 ஆயிரத்து 133 வாக்காளர்களும், மத்திய சென்னை நாடாளுமன்றத் தொகுதியில் 13 லட்சத்து 50 ஆயிரத்து 161 வாக்காளர்களும், வடசென்னை நாடாளுமன்றத் தொகுதியில் 14 லட்சத்து 96 ஆயிரத்து 224 வாக்காளர்களும் உள்ளனர். இதில் சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதியில் மட்டும் 6 லட்சத்து 67 ஆயிரத்து 606 வாக்காளர்கள் உள்ளனர்.
முன்னேற்பாடுகள் தீவிரம்: தேர்தலுக்கான பயிற்சி அளிக்கப்பட்டு, எந்த வாக்குச்சாவடி மையத்திற்குச் செல்ல வேண்டும் என்ற ஆணை வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், வாக்குச்சாவடிக்கு செல்வதற்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை சட்டமன்றத் தொகுதியில் இருந்து வாக்குச்சாவடி மையங்களுக்கு இன்று அனுப்பி வைக்கப்படுகிறது. அதையடுத்து, அனைத்து வாக்குச்சாவடி மையங்களில் காலை 5.30 மணி முதல் 7 மணி வரை மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்பட்டு, அதனைத் தொடர்ந்து நாளை காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
பலத்த பாதுகாப்பு: வாக்குப்பதிவு முடிந்த உடன், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை வடசென்னைக்கு ராணி மேரி கல்லூரிக்கும், மத்தியச் சென்னைக்கு லயோலா கல்லூரியிலும், தென் சென்னைக்கு அண்ணா பல்கலைக்கழகத்தின் கிண்டி பொறியியல் கல்லூரியிலும் வாக்கு எண்ணிக்கை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கும் அறைகள் முழுவதும் அடைக்கப்பட்டுள்ளன.
வாக்குப்பதிவு இயந்திரங்களை வைப்பதற்கு அலமாரிகள் அமைக்கப்பட்டு, அதில் வைக்கப்பட உள்ளது. 24 மணி நேரமும் சிசிடிவி வசதியும், 24 மணி நேரம் துணை ராணுவம், காவல்துறையின் பாதுகாப்பும் போடப்பட உள்ளது. வேட்பாளர்களின் முகவர்கள் கண்காணிப்பதற்காக அவர்கள் தங்குவதற்குத் தேவையான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
வாக்குப்பதிவு முடிந்த பின்னர், நாளை இரவு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு வந்து வைக்கப்பட்டு, வேட்பாளர்களின் முகவர்களின் முன்னிலையில் சீல் வைக்கப்படும். அதனைத் தொடர்ந்து பாதுகாக்கப்பட்டு, ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.