சென்னை: சென்னை மணப்பாக்கம் பாபுஜி மெமோரியல் ஆசிரமத்தில் ஜூன் 1ஆம் தேதி மற்றும் 2ஆம் தேதி யோகா திருவிழா நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சியில் தமிழக அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் மற்றும் ஊரக தொழில்துறை மற்றும் சிறு தொழில், குடிசை மாற்று வாரியம் அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆகியோர் கலந்துகொள்ள இருக்கின்றனர்.
இந்த நிகழ்வைப் பற்றி இன்று (மே 30), சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் ஹார்ட்புல்நெஸ் மையத்தின் தமிழ்நாடு ஒருங்கிணைப்பாளர் எஸ்.பிரகாஷ், சத்தியானந்த யோகா மையத்தைச் சேர்ந்த சன்னியாசி ஸ்ரீவர்ஷி, க்ரிஷ்ணமாச்சாரிய யோகா மையத்தைச் சேர்ந்த ஸ்ரீலேகா, யோகாவாகினி யோகா மையத்தைச் சேர்ந்த சரஸ்வதி வாசுதேவன் மற்றும் சிவானந்த யோகா மையத்தைச் சேர்ந்த உமா நடராஜன் ஆகியோர் பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசினர்.
அப்போது யோகா திருவிழா எவ்வாறு நடைபெறப் போகிறது என்பது குறித்தும், யோகாவின் முக்கியத்துவம், அதை செய்வதால் ஏற்படும் பயன்கள் ஆகியவை குறித்தும் கூறினார்கள். தொடர்ந்து பேசிய அவர்கள், "இந்த விழாவில் கிட்டத்தட்ட 2,000 நபர்கள் கலந்துகொள்வர்கள். அவர்கள் அனைவருக்கும் உணவு இலவசம் மற்றும் நுழைவுக் கட்டணம் ஏதும் கிடையாது.
குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு ஏற்றார் போல யோகா பயிற்சிகள் அளிக்கப்படும். ஏதேனும் நோய் இருந்தாலும் கூட அவர்களுக்குத் தேவையான மருத்துவ பயிற்சிகளும் அளிக்கப்படும்" எனத் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து, சிவானந்த யோகா மையத்தைச் சேர்ந்த உமா நடராஜன் கொடுக்கப்படும் பயிற்சிகள் குறித்து விளக்கினார்.
இதையும் படிங்க: கார், பைக் விரும்பிகளுக்கு விருந்தளித்த விண்டேஜ் கண்காட்சி.. திருச்சி மக்களின் கவனத்திற்கு! - British Age Car And Bike Exhibition