சென்னை: சொத்துக் குவிப்பு வழக்குகளில் முன்னாள் இந்நாள் அமைச்சர்கள் விடுவிக்கப்பட்டதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து சூமோட்டோ வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொண்டார்.
அந்த வகையில், அமைச்சர்கள் தங்கம் தென்னரசு மற்றும் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் முன்னாள் அமைச்சர் வளர்மதி ஆகியோருக்கு எதிரான வழக்குகளின் இறுதி விசாரணை இன்று முதல் துவங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனை அடுத்து, இந்த வழக்குகள் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, முன்னாள் அமைச்சர் வளர்மதிக்கு எதிரான வழக்கின் விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளதை அடுத்து, அந்த வழக்கின் விசாரணையைச் செப்டம்பர் மாதத்திற்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் ஒத்திவைத்தார்.
அதன் தொடர்ச்சியாக, அமைச்சர்கள் தங்கம் தென்னரசு மற்றும் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில், மூத்த வழக்கறிஞர்கள் ஆஜராக உள்ளதால் விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்தக் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட நீதிபதி, அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு எதிரான வழக்கின் விசாரணையை நாளை தினத்திற்கு (பிப்.28) ஒத்திவைத்துள்ளார். மேலும், இந்த வழக்கின் விசாரணை நாளையும் (பிப்.28) மார்ச் 5ஆம் தேதியும் நடைபெறும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.
இதுமட்டும் அல்லாது, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிரான வழக்கின் விசாரணை மார்ச் 5 மற்றும் 6ஆம் தேதிகளிலும், அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மீதான வழக்கின் விசாரணை மார்ச் 7 மற்றும் 8ஆம் தேதிகளிலும் நடைபெறும் என்றும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அறிவித்துள்ளார்.
மேலும், நிர்ணயிக்கப்பட்ட இந்த தேதிகளில் வாதங்களை முன்வைக்க வேண்டும் என்று அனைத்துத் தரப்பு வழக்கறிஞர்களுக்கும் உத்தரவிட்ட நீதிபதி, லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர், மார்ச் 8ஆம் தேதி வாதங்களைத் துவங்கி 11ஆம் தேதி நிறைவு செய்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: நாடாளுமன்றத் தேர்தல்: திருநெல்வேலி எம்.பி., எஸ்.ஞானதிரவியம் செய்ததும்..! செய்யத் தவறியதும்..!