சென்னை: "விரைவில் 1066 சுகாதார ஆய்வாளர்களுக்கு பணி நியமனம் வழங்கப்படும்" என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை கோபாலபுரத்தில் நடைபெற்ற தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர் சங்கத்தின் நூற்றாண்டு விழா மற்றும் புதிய சங்கம் கட்டிடம் திறப்பு விழாவில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் பங்கேற்று புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது,"முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நூற்றாண்டைக் கொண்டாடும் இந்த ஆண்டில், தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர் சங்கமும் நூற்றாண்டு கொண்டாடுவது தனிச்சிறப்பாகும். சுகாதார ஆய்வாளர்கள் தமிழ்நாட்டில் மருத்துவத்துறைக்கு மிகப்பெரிய அளவில் சேவை ஆற்றி வருகின்றனர். மக்களுக்கு பேரிடர் போன்ற சமயங்களிலும், பருவமழைகளுக்கு முன்வரும் டெங்கு, சிக்கன்குனியா, மலேரியா போன்ற நோய் பாதிப்புகளில் இருந்து காப்பவர்கள் சுகாதார ஆய்வாளர்கள்தான். 1066 சுகாதார ஆய்வாளர்கள் பணியிடங்களை நிரப்பும் பணிகள் மருத்துவ பணியாளர் தேர்வாணையம் மூலம் நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: ஒரே நாளில் அடுத்தடுத்த இடங்களில் நடைபெற்ற சாலை விபத்களில் நான்கு பேர் உயிரிழப்பு-சென்னை திருவொற்றியூரில் சோகம்!
மருத்துவப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் 8000 பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளது. சுகாதார ஆய்வாளர்களில் உள்ள பல்வேறு பிரிவுகளை சேர்ந்தவர்கள் நீதிமன்றத்தில் 37 வழக்கு தொடுத்தனர். இந்த வழக்குகளில் உயர்நீதிமன்றம் 10 வகையான அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளது.
அதன் அடிப்படையில் மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் சம்பந்தப்பட்ட நிர்வாகிகளை அழைத்து, கோரிக்கைகளுக்கு தீர்வு கண்டு 1066 சுகாதார ஆய்வாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு கூறியுள்ளோம். ஒரு வாரத்தில் அந்த கூட்டம் நடத்தப்பட்டு, மிக விரைவில் 1066 சுகாதார ஆய்வாளர்களுக்கு பணி நியமனம் வழங்கப்படும்" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "தமிழ்நாட்டில் பருவமழை தொடர்ந்து கொண்டிருக்கிற நிலையில், டெங்கு பாதிப்பு கட்டுக்குள் இருக்கிறது. தமிழ்நாட்டில் 2012ல் டெங்கு காரணமாக 66 பேர் உயிரிழந்துள்ளனர். 2015ஆம் ஆண்டில் 65 பேர் டெங்கு காரணமாக இறந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் அனைத்து சேவைத்துறைகளும் ஒன்றிணைந்து செயல்பட்டு டெங்குவை கட்டுப்படுத்துவதில் சிறப்பாக பணியாற்றுகின்றன. இந்தாண்டு முடிவடையும் தருவாயில் இருக்கிறோம். வடகிழக்கு பருவமழையும் பாதியை தாண்டி நிலையில், டெங்குவால் ஏற்பட்ட உயிரிழப்பு தொடர்ந்து 7 என்ற அளவில் பதிவாகி இருக்கிறது," என தெரிவித்தார்.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்