சென்னை: வடகிழக்கு பருவமழை விரைவில் துவங்க உள்ளது.இந்த நிலையில் பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
"அதில் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழைப் பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது, எனவே சுகாதாரத்துறை அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- பருவமழைக்கு முன் சுகாதாரத்துறை தயார்நிலையில் இருக்க வேண்டும். புயல், கனமழை எச்சரிக்கை விடப்பட்டதும் சுகாதாரப் பணியாளர்கள் 24 மணி நேரமும் போதுமான அளவில் பணியில் இருக்க வேண்டும்.
- வெள்ள அபாயம், பாதிக்கப்படக்கூடிய தாழ்வான பகுதிகளுக்கு அத்தியாவசிய மருந்துகளுடன் மருத்துவ அலுவலர், பணியாளர், செவிலியர், சுகாதார ஆய்வாளர் ஆகியோர் அடங்கிய விரைவான மருத்துவ குழு இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
- நோய்தொற்று ஏற்படாமல் தடுப்பதற்கு தேவையான அளவிற்கு கிருமிநாசினிகள் மற்றும் பூச்சிக்கொல்லிகள் இருப்பு வைத்திருக்க வேண்டும். அதிக ஆபத்து, வெள்ளம் பாதிக்கப்படக்கூடிய பகுதிகள், அவசர காலங்களில் 108 ஆம்புலன்ஸ் கிடைக்கச் செய்ய வேண்டும்.
- நிவாரண முகாம்களில் சுகாதாரமான உணவு, குடிநீர் மற்றும் சுகாதார வசதிகள் மற்றும் சுத்தமான காற்றோட்டம் , சுகாதாரம் ஆகியவற்றை உறுதி வேண்டும்.
- பருவமழைக்கு துவங்குவதற்கு முன்னதாக, மருத்துவமனையில் அவசர மருந்துகள், தடுப்பூசிகள் மற்றும் படுக்கை வசதிகளை உருவாக்க வேண்டும்.
- கர்ப்பிணிகளுக்கு தொடர்ந்து சிகிச்சை கிடைக்கவும், அவர்களுக்கான பிரசவத்தை உறுதி செய்ய தொடர்ந்து கண்காணிக்கவும் ஏற்பாடு செய்ய வேண்டும்.
- மின்சாரம் தடை ஏற்படும் போது ஜெனரேட்டரை இயக்கும் வகையில் எரிபொருள் கையிருப்பில் வைத்திருப்பதன் மூலம் மருத்துவமனைகளில் 24 மணி நேரமும் மின்சாரம் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
- பருவமழைக்குப் பின்னர், பொது மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்க வேண்டும். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து பகுதிகளிலும் சூப்பர் குளோரினேஷன் செய்யப்பட வேண்டும்.
- காய்ச்சல், சிறு காயங்கள், தோல் நோய்கள் போன்றவற்றுக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும்.
இதையும் படிங்க: மழையால் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயருமா? அதிகாரிகளுக்கு முதல்வரின் அறிவுறுத்தல்கள் என்னென்ன..?
- நீரில் மூழ்கியவர்களுக்கும், பாம்பு உள்ளிட்ட விஷ பிராணிகள் கடித்தால் முதலுதவி அளித்த உடனேயே அருகில் உள்ள உயர்சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட வேண்டும்.
- எதிர்பாராத காரணத்தால் அதிகளவில் இறப்பு ஏற்பட்டால் உடல்களைக் கண்டறிந்து அடக்கம் செய்வதற்கான வசதியையும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
- வெள்ளம் ஏற்படக்கூடிய பகுதிகளில் உள்ள கர்ப்பகால தாய்மார்களை அடையாளம் கண்டு, மழையால் பாதிப்பு ஏற்படுவதற்கு முன்னதாக அருகிலுள்ள மையங்களில் அனுமதிக்கப்பட வேண்டும்.
- மழையால் பாதிக்கப்பட்ட இடங்களில் தங்க வைக்கப்படும் முகாம்களில், சரியான காற்றோட்ட வசதிகளைக் கொண்டிருக்க வேண்டும்.
- தங்க வைக்கப்படுவார்களுக்கு இடையே உடல் ரீதியான இடைவெளியை பராமரிக்கும் வகையில் போதுமான இட வசதி ஏற்படுத்த வேண்டும்.
- காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்த மருத்துவமனைகளுக்கு அனுப்ப வேண்டும்.
- பேரிடர் காலம் குறையும் வரை சுகாதாரமான உணவுகளை வழங்க வேண்டும். சுகாதாரமான குளோரினேட்டட் தண்ணீர் எல்லா நேரத்திலும் உறுதி செய்யப்பட வேண்டும். குளியலறை, கழிப்பறைகளில் முறையான சுகாதாரம் பராமரிக்கப்பட வேண்டும்" என அறிவுறுத்தி உள்ளார்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்