மதுரை: சிவகங்கை மாவட்டம், கண்டரமாணிக்கம் பகுதியில் ஏப்ரல் 25ஆம் தேதி அன்று ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழக்கக் கோரி, கண்டரமாணிக்கம் பகுதி ஜல்லிக்கட்டு விழா கமிட்டி தலைவர் பெரியதம்பி என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், "சிவகங்கை மாவட்டம், கண்டரமாணிக்கம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ மீனாட்சி அம்மன் கோயிலில், ஒவ்வொரு ஆண்டும் சித்திரை திருவிழா விமர்சையாக நடைபெறும். அந்த வகையில், இந்த ஆண்டு ஏப்ரல் 16 முதல் 25ஆம் தேதி வரை இந்த விழா கொண்டாடப்படுகிறது. மேலும், இந்த கோயிலின் 116ஆம் ஆண்டு விழாவும் இந்த ஆண்டு கொண்டாடப்படுகிறது.
இந்த நிலையில், ஒவ்வொரு ஆண்டும் விழாவின் இறுதி நாளன்று, சிறுமருதூர் கண்மாய் பொட்டல் பகுதியில் ஜல்லிக்கட்டு நடத்துவது வழக்கம். அந்த வகையில், கண்டரமாணிக்கம் கிராமம், ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான அரசிதழில் இடம் பெற்றுள்ளது. எனவே, இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரி அதற்கான இணையதளத்தில் விண்ணப்பிக்க முயன்ற போது, இணையதளம் முடங்கி இருந்தது.
இதைத்தொடர்ந்து, அதிகாரிகளுக்கு மனு அனுப்பப்பட்டது. ஆனால், அதிகாரிகள் தரப்பில் இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை. ஆகவே, சிவகங்கை மாவட்டம் கண்டரமாணிக்கம் பகுதியில் ஏப்ரல் 25ஆம் தேதியன்று ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் சுரேஷ்குமார், அருள்முருகன் ஆகியோர் அமர்வில் நேற்று (திங்கட்கிழமை) விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு அரசு அறிவிப்பாணையில் இந்த ஊர் இடம் பெற்றுள்ளதா? எனக் கேள்வி எழுப்பினர். அப்போது அரசு தரப்பில், ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான அரசாணையில் ஊர் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்த நீதிபதிகள், 24ஆம் தேதிக்குள் (நாளை) ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான அனுமதியை மாவட்ட ஆட்சியர் வழங்க வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை முடித்து வைத்தனர்.
இதையும் படிங்க: ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருளும் கள்ளழகர்! வரலாறு தெரியுமா? - Madurai Azhagar Festival 2024