திருப்பத்தூர்: நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில், தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சியினர் தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். தற்போது பாஜக சார்பில் திருவண்ணாமலை நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளராக அஸ்வத்தாமன் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச்.ராஜா தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.
ஜோலார்பேட்டை சட்டமன்றத் தொகுதிகளான கொண்டகிந்தனப்பள்ளி, கொத்தூர், சொரக்கல்நாத்தம், நாயனசெருவு, கத்தாரி, நாட்றம்பள்ளி பேரூராட்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அதனைத் தொடர்ந்து அஸ்வத்தமனுக்கு ஆதரவாக நயனசெருவு மற்றும் நாட்றம்பள்ளி பேரூராட்சி பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது பேசிய ஹெச்.ராஜா, "இந்த தேர்தல் தேசிய சக்திகளுக்கும், இந்த நாட்டுக்கு எதிராகச் செயல்படக்கூடிய தீய சக்திகளுக்கும் இடையுமான தர்ம யுத்தம். இப்போது குடிபோதை மட்டுமில்லை, போதை மருந்துகளான கஞ்சா இவையெல்லாம் பள்ளிக்கூட குழந்தைகள் பையில் கஞ்சா பொருட்கள் உள்ளன. இது குறித்து சென்னை வந்தபோதே பிரதமர் மோடி பேசி உள்ளார்.
பள்ளிக்கூட குழந்தைகள் போதைக்கு அடிமையாகி உள்ளனர். போலீசுக்கு போதைப்பொருட்கள் விற்கும் இடம் தெரியவில்லை ஆனால் பத்து வயது பையனுக்கு போதைப் பொருட்கள் விற்குமிடம் தெரிகிறது. அந்த அளவுக்கு அழிவை நோக்கிச் செல்லும் ஆட்சியை நடத்துகிறது திராவிட அரசாங்கம். இந்த அரசாங்கத்தை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும்.
நேற்றைய கருத்துக் கணிப்பில், தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 412 எம்பிக்கள் வெற்றி பெறுவார்கள் என வெளியாகி உள்ளது. திமுக முன்னாள் எம்பி அண்ணாதுரை நாடாளுமன்றத்தில் இதுவரை ஐந்து ஐந்து வருடத்தில் ஒரு முறை கூட தொகுதியின் திட்டத்தைப் பற்றிப் பேசவில்லை. தமிழ்நாட்டில் இருந்து 38 மரம் நாடாளுமன்றத்திற்குச் சென்றது" எனத் தெரிவித்தார்.
மேலும், இந்நிகழ்வில் பாஜக கவுன்சிலர் குருசேவ் மற்றும் தோழமைக் கட்சி நிர்வாகிகள் மற்றும் ஜோலார்பேட்டை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட முக்கிய நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் மற்றும் தொண்டர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.