சென்னை: பிரான்ஸை தலைமையிடமாகக் கொண்ட டயர் தயாரிப்பு நிறுவனமான மிஷலின், தமிழகத்தின் வாகன டயர் தயாரிப்பில் முன்னணி நிறுவனமாகவும் இருந்து வருகிறது. சென்னையை அடுத்த கும்மிடிப்பூண்டியில் இதன் தொழிற்சாலை அமைத்துள்ளது. அங்கு லாரி, பேருந்து போன்ற கனரக வாகனங்களுக்கான டயர்கள் தயாரிக்கப்படுகின்றன.
இந்நிலையில் இந்நிறுவனம் அடுத்த கட்ட விரிவாக்க திட்டத்தில் செயல்படுத்த உள்ளதாக கடந்த ஆகஸ்ட் மாதம் தகவல் வெளியான நிலையில் இதற்கான அடிக்கல் நாட்டு விழாவும் நடைபெற்றது. இந்த விரிவாக்க திட்டத்தில், 563 கோடி ரூபாய் முதலீட்டில், கார்களுக்கான பிரீமியம் டயர்களை தயாரிக்க உள்ளதாக நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஏற்கனவே 2,840 கோடி முதலீட்டில் இந்த தொழிற்சாலை செயல்பட்டு வரும் நிலையில், தற்போதைய நிலவரப்படி இந்த தொழிற்சாலை மூலம் 1461 பேர் பணிபுரிந்து வரும் நிலையில் இந்த விரிவாக்க திட்டம் மூலம் கூடுதலாக 500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: வாட்ஸ்ஆப் அப்டேட்: தொடர்புகள் இணைப்பதை எளிதாக்கிய மெட்டா!
ஏற்கனவே உள்ள கட்டுமான பகுதி 1.92 லட்சம் சதுர அடியில் இருந்து 2.06 லட்சம் சதுர அடியாக விரிவாக்கம் செய்ய முடிவு செய்துள்ளதாகவும், தற்போது ஆண்டுக்கு 6.80 லட்சம் டயர்கள் உற்பத்தி செய்யப்பட்டு வரும் நிலையில் விரிவாகத்திற்கு பிறகு ஆண்டுக்கு 14 லட்சம் கார் டயர்கள் உற்பத்தி செய்யும் வகையில் விரிவாக்கம் திட்டம் செயல்படுத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்த தொழிற்சாலை விரிவாக்க திட்டத்திற்கான சுற்றுச்சூழல் அனுமதிகோரி மிஷலின் நிறுவனம் இன்று தமிழக மாநில சுற்றுசூழல் துறைக்கு விண்ணப்பம் அனுப்பியுள்ளனர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்