சென்னை: ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள மாநகராட்சி பூங்காவின் காவலாளியின் 5வயது மகளை, அப்பகுதியில் வசிக்கும் புகழேந்தி என்பவரின் வளர்ப்பு நாய்கள் கடுமையாகக் கடித்ததில், சிறுமி படுகாயம் அடைந்தார். சிறுமியை மீட்க முயன்ற தாயையும் நாய்கள் கடித்துள்ளது. ஆனால், நாய் கடிக்கும் போது நாய்களின் உரிமையாளர் எதுவும் செய்யாமல் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
குழந்தையின் அழுகுரல் கேட்டு வந்த அப்பகுதி மக்கள் படுகாயம் அடைந்த குழந்தையை மீட்டு, சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். நாய்களின் உரிமையாளர் சிறுமியின் மருத்துவச் செலவுகளை ஏற்றுக் கொள்வதாகத் தெரிவித்ததை அடுத்து, ஆயிரம் விளக்கு பகுதியில் அப்பல்லோ குழந்தைகள் மருத்துவமனைக்குச் சிறுமி மாற்றப்பட்டுள்ளார்.
மேலும், நாய்களின் உரிமையாளரிடம் ஆயிரம் விளக்கு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், காவல்துறையினர் உரிமையாளரைக் காப்பாற்ற முயற்சி செய்வதாகப் படுகாயம் சிறுமியின் உறவினர்கள் தரப்பில் குற்றச்சாடு எழுந்துள்ளது.
இந்நிலையில், சென்னை பெருநகர மாநகராட்சி அலுவலகத்தில் சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன், 12ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் குறித்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசும் போது, மாநகராட்சி பூங்காவில் வளர்ப்பு நாய்கள் சிறுமியைத் தாக்கியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு, ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள மாநகராட்சி பூங்காவில் 5 வயதுக் குழந்தையை நாய் கடித்தது எதிர்பாராத சம்பவம். செல்லப்பிராணிகளை வளர்ப்பதற்கான உரிமம், அந்த நாய் உரிமையாளர்களிடம் இல்லை. அதனால் தனிப்பட்ட முறையில் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.
முன்னதாக, அமெரிக்கன் புல்டாக், ஃபிலா பிரேசிலிரோ உள்ளிட்ட வெறி தன்மை கொண்ட நாய்களை மத்திய அரசு தடை செய்தது உத்தரவிட்டது. ஆனால், பல்வேறு உயர் நீதிமன்றங்களில் அதற்கு இடைக்காலத் தடை வழங்கப்பட்டுள்ளது. அதனால், கால்நடைத்துறையுடன் இணைந்து நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும், கடித்த நாய்க்கு போடப்பட்டுள்ள தடுப்பூசி உள்ளிட்டவை குறித்து விசாரணை மேற்கொள்ள குழந்தையைக் கடித்த நாய் உரிமையாளருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளடது. சென்னை பெருநகர் மாநகராட்சி பொருத்தவரை எந்த வகை செல்லப்பிராணி வளர்ப்பதற்கும் உரிமம் பெறுவது அவசியம்" எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், "விலங்குகள் நலத்துறையின் விதிமுறைகள் மிகவும் சவாலானதாக உள்ளன. விலங்கு ஆர்வலர்களையும் ஒருங்கிணைத்து, பாதிக்கப்பட்டவர்களையும் முன்வைத்தும், இந்த விவகாரத்தில் உள்ள சட்ட சிக்கல் அனைத்தையும் உயர் நீதிமன்றத்தின் கவணத்திற்கு கொண்டு சென்று தீர்வு காணப்படும்" என சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
இதையும் படிங்க: கையில் ஒரு நாய், தலையில் ஒரு நாய் குழந்தையை குதறிய ராட்வீலர் நாய்கள்.. பதறிய சென்னை!