கோயம்புத்தூர்: கோவையில் ஒரு அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவி ஒருவருக்கு அப்பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் பாலியல் துன்புறுத்தல் அளித்ததாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவம் கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில்தான் தெரியவந்துள்ளது. இதனையடுத்து, கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி சம்பந்தப்பட்ட ஆசிரியர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இதைத்தொடர்ந்து அப்பள்ளியின் ஓவிய ஆசிரியர், பள்ளியில் நடைபெற்ற பாலியல் துன்புறுத்தல் சம்பவத்தை ஆசிரியர்கள் சிலர் மறைக்க முற்படுவதாகவும், அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவித்திருந்தார்.
ஆனால், மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவித்த ஓவிய ஆசிரியர் போலியாக புகார் தெரிவிப்பதாகக் கூறப்பட்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அச்சமயம் பள்ளியின் தலைமை ஆசிரியராக இருந்த ஜீவா ஹட்சன் உள்ளிட்ட 6 ஆசிரியர்கள் மீது போக்சோ சட்டப் பிரிவுகளின் கீழ் போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தனர்.
இதற்கு முன்னதாக தலைமை ஆசிரியர் ஜீவா ஹட்சன் மற்றொரு பள்ளிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டிருந்தார். இந்த நிலையில், அப்போதைய அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜீவா ஹட்சனை பணியிடை நீக்கம் செய்து பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக அதிகாரிகளிடம் கேட்டபோது, "சம்பந்தப்பட்ட பள்ளியில் நடைபெற்ற பாலியல் துன்புறுத்தல் குறித்து தெரிவிக்காமல் மறைத்ததாக ஜீவா ஹட்சன் மீது குற்றச்சாட்டு உள்ளது. மேலும், போக்சோ வழக்கும் இவர் மீது பதிவு செய்யப்பட்டுள்ளது. இது மட்டுமில்லாது, ஜூன் 30ஆம் தேதியுடன் (அதாவது இன்று) அவர் ஓய்வுபெற இருந்த நிலையில், அவரை பணியிடை நீக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது' என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும், கடந்த சில வாரங்களுக்கு முன்பு சம்பந்தப்பட்ட அரசுப் பள்ளியில் பணியாற்றிவந்த, போக்சோ வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஆசிரியர்கள் உள்ளிட்ட 10 பேர் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: அர்ச்சகர் பாலியல் வழக்கு; ' எனக்கு வாழ்க்கை தர வேண்டும்' - பெண் தொகுப்பாளினி கோரிக்கை!