திருநெல்வேலி: நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம், மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள மாஞ்சோலை தேயிலைத் தோட்டம் சட்ட பிரச்னைகளால் மூடப்பட்டுள்ளது. தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் காட்டை விட்டு பிரிய மனமில்லாமல் அங்கேயே வசிக்கின்றனர். இதுதவிர, மின்வாரிய ஊழியர்களும் வசிக்கின்றனர். எனவே, மாஞ்சோலை பகுதிகளுக்கு தற்போது மூன்று முறை அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.
அதில் இரவு செல்லும் பேருந்து மாஞ்சோலை ஊத்து பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டு, அதிகாலை 4 மணியளவில் கீழே வருகிறது. அதன்படி, இன்று அதிகாலையில் வழக்கம் போல் மாஞ்சோலையில் இரவு நிறுத்தி வைக்கப்பட்ட அரசுப் பேருந்தை இயக்குவதற்காக நடத்துநர் மற்றும் ஓட்டுநர் பேருந்தை நோக்கிச் சென்றுள்ளனர். அப்போது திடீரென காட்டு யானைகள் வந்துள்ளன. அங்கிருந்த யானைகள், நடத்துநர் பாடலிங்கம் மற்றும் ஓட்டுநர் ராஜ்குமாரை விரட்டியதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: மழை எப்போது பெய்யும்? இனி கையிலே அப்டேட் இருக்கு.. தமிழக அரசின் TN-Alert செயலி அறிமுகம்!
இதில் தப்பி ஓடிய இருவரும் உயிரை காத்துக்கொள்ள பேருந்துக்குள் ஏறியுள்ளனர். தொடர்ந்து, அந்த காட்டு யானைகள் பேருந்தின் கதவை தாக்கியுள்ளது. இதில் பேருந்தின் கண்ணாடி உடைந்து சேதமானது. இதைப் பார்த்த அங்கிருந்தவர்கள், யானைகளை அடர் வனப்பகுதிக்குள் விரட்டினர். யானைகள் விரட்டியதில் நடத்துநர் பாடலிங்கத்திற்கு வலது கால் பகுதியில் காயம் ஏற்பட்டது. உடனடியாக, மாஞ்சோலை மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், தற்போது மேல் சிகிச்சைக்காக அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லபட்டார். மேலும், சம்பவம் நடந்த இடத்தில் வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஏற்கனவே மாஞ்சோலை பகுதியில் தேயிலைத் தோட்டங்கள் மூடப்பட்டு தொழிலாளர்கள் வெளியேற்றப்படுவதால் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரிக்கும் என அங்கு வசிக்கும் மின்வாரிய தொழிலாளர்கள் அச்சத்தில் உள்ளனர். தேயிலைத் தோட்டங்கள் மூடப்பட்டாலும், நீர்மின் நிலையம் செயல்பட்டு வருவதால் 24 மணி நேரமும் நிச்சயம் மின் ஊழியர்கள் அங்கு தங்க வேண்டிய சூழல் உள்ளது. முன்பு ஆயிரக்கணக்கான தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் அங்கு வசித்ததால், மக்கள் நடமாட்டம் அதிகமாக காணப்பட்டது.
எனவே, வனவிலங்குகளும் பெரிய அளவில் கீழே இறங்கி வராது. இது போன்ற சூழ்நிலையில், தேயிலைத் தோட்டம் மூடப்பட்டதால் பெரும்பாலான தொழிலாளர்கள் மாஞ்சோலையை விட்டு வெளியேறியுள்ளனர். மீதம் உள்ள சில தொழிலாளர்கள் மட்டுமே மீண்டும் தங்களுக்கு அங்கேயே வாழ்வாதாரம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்து வருகின்றனர்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்