சென்னை: 78வது ஆண்டு சுதந்திர தினவிழாவை முன்னிட்டு, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்துச் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "எனது அன்பான தமிழ்நாட்டின் சகோதர, சகோதரிகளே, நமது சுதந்திரத்தின் 78வது ஆண்டு விழாவை முன்னிட்டு, உங்கள் அனைவருக்கும் எனது அன்பான மற்றும் சிறப்பான நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த தருணத்தில், நீண்ட கால அடக்குமுறை காலனித்துவ ஆட்சியிலிருந்து நமக்கு விடுதலை பெற்றுத் தந்த நமது சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கும், உயிர் நீத்தவர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த அஞ்சலியை தெரிவித்துக் கொள்கிறேன். நமது சமூகத்தில் குறிப்பாக நமது இளைஞர்களிடையே அதிகரித்து வரும் போதைப்பொருள் மற்றும் போதைப் பொருட்களின் பரவலால் நாம் மிகவும் கவலை அடைந்துள்ளோம். பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு அருகே போதைப்பொருள் எளிதில் கிடைப்பதாக கவலையளிக்கும் தகவல்கள் உள்ளன. இது மிக, மிக அபாயகரமானது.
போதைப்பொருள் - குடும்பங்கள், சமூகங்கள், மாநிலங்கள் மற்றும் நாடுகளை அழித்துள்ளது. நமது இளைஞர்களே நமது எதிர்காலம். போதையில் இருந்து நமது இளைஞர்களை நாம் காப்பாற்ற வேண்டும். போதைக்கு எதிராக எப்போதும் விழிப்புடன் இருப்பது நம் அனைவரின் கூட்டுப் பொறுப்பாகும்.
நண்பர்களே, கடந்த இரண்டு ஆண்டுகளில், கள்ளச்சாராயம் மற்றும் விஷச்சாரயம் அருந்தியதால் விலைமதிப்பற்ற பல உயிர்களை இழந்துள்ளோம். இந்த ஆண்டு இது ஒப்பீட்டளவில் அதிக பேரழிவை ஏற்படுத்தியது. பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் ஏழைகள். வருவாய் ஈட்டித்தந்த உறவுகளை பல குடும்பங்கள் இழந்துள்ளன.
பெண்கள் கணவன்மார்களை இழந்துள்ளனர், குழந்தைகள் ஆதரவற்ற நிலைக்கு சென்றுள்ளனர். இதற்கு காரணமான மரண வியாபாரிகள் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பித்து விடாமல் இருக்கவும் அவர்களுக்கு மிக கடுமையான தண்டனை வழங்கப்படுவதையும் காவல்துறை உறுதிப்படுத்தும் அதேவேளையில், நமது சட்ட அமலாக்க அமைப்புகளும் பொதுமக்களும் கள்ளச்சாராய விநியோகத்துக்கு எதிராக விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். மிகவும் மோசமாக பாதிக்கப்படும் நமது தாய்மார்கள் மற்றும் சகோதரிகள், போதைப்பொருள் மற்றும் கள்ளச்சாராயத்துக்கு எதிராக செயல்படுமாறு நான் வலியுறுத்துகிறேன்.
எனது அன்பான சகோதர, சகோதரிகளே, நமது தேசம் முன்னெப்போதுமில்லாதவாறு, அளவிலும் வேகத்திலும் துரிதமாக வளர்ச்சியடைந்து வருவதால், நமது எழுச்சியால் மகிழ்ச்சியாகவோ வசதியாகவோ உணராத விரோத சக்திகள் நாட்டுக்கு உள்ளேயும் வெளியேயும் உள்ளன.
அவை நம்மை பலவீனமாகவும், ஏழையாகவும் வைத்திருக்க விரும்புகின்றன. நமது முன்னேறும் வேகத்தைக் குறைக்க அவை பல்வேறு சீர்குலைக்கும் முயற்சிகளைப் பயன்படுத்துகின்றன. நமது சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்கவும், நமது பொருளாதாரத்தை நசுக்கவும் கணிசமான அளவில் வெளிநாட்டு நிதியை ரகசியமாக பயன்படுத்தப்படுகிறது. தொடர்ச்சியான பொய்ப் பிரசாரங்கள் மூலம் நமது அமைப்புகள் மீது பொதுமக்களின் நம்பிக்கையைக் குலைக்க முயல்கின்றன.
நமது அரசியலமைப்பு ஆபத்தில் உள்ளதாகவும், மதச்சார்பின்மை மற்றும் ஜனநாயகம் பாதுகாப்பற்று உள்ளதாகவும் நமது ஒழுங்குமுறை அமைப்புகள் சமரசத்துக்கு ஆளாகி விட்டதாகவும் பொய் பரப்புரை செய்து மக்கள் மனதில் அச்சத்தை ஏற்படுத்த முயல்கின்றன. அத்தகைய பாரத எதிர்ப்பு சக்திகள் கூட்டணியின் தீய வடிவங்களுக்கு எதிராக நாம் எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும். நண்பர்களே, மீண்டும் ஒருமுறை உங்கள் அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். வாழ்க தமிழ்நாடு, வாழ்க பாரதம், ஜெய் பாரத்" என்று தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், சென்னை ஐ.ஐ.டி மற்றும் ஆளுநர் மாளிகை இணைந்து, தேச பிரிவினை கொடூரத்தின் நினைவு நாள் என்ற தலைப்பில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் கலந்துகொண்ட நிகழ்வு சென்னை ஐ.ஐ.டி ஆராய்ச்சி மைய வளாகத்தில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, ஐ.ஐ.டி இயக்குநர் காமகோடி, சுதந்திரப் போராட்ட வீரர் மாதவன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசும் போது, "10 ஆண்டுகளுக்கு முன் வரை இந்தியா மீது, இந்தியர்கள் மீது உலகளாவிய அளவில் மரியாதை இல்லை. வறுமையான நாடு, மக்கள் தொகை நிறைந்த நாடு என்ற பார்வை இருந்தது. ஆனால், தற்போது அப்படியில்லை. உலகளாவிய விவகாரங்களில் இந்தியாவை ஆலோசிக்காமல் முடிவு எடுப்பதில்லை. அந்த அளவிற்கு இந்தியாவின் மீது உலகளாவிய பார்வை, மரியாதை கூடியிருக்கிறது.
அனைவரும் ஒன்று என்பதே நமது நாட்டின் சிந்தனை. 65 ஆண்டுகளாக நாட்டை ஆண்டவர்கள் இந்த சிந்தனையை உடைக்க நினைத்தனர். அமெரிக்காவில் உட்கார்ந்துகொண்டு, இந்திய பொருளாதாரத்தை சீர்குலைக்கும் வேலைகளைச் செய்கின்றனர். இங்கு குழப்பத்தையும், கலவரங்களையும் உருவாக்க பல மில்லியன் டாலர் செலவிடப்படுகிறது.
வாய்ப்பு கிடைத்தால் நாட்டை துண்டாடிவிடுவார்கள். போலியான இந்த கும்பல்களால் எதையும் சாதிக்க முடியாது. இன்று மிகப்பெரிய ராணுவ பலத்தை நாம் கொண்டுள்ளோம். பல நாடுகள் நம்மிடம் இருந்து ஆயுதங்களை இறக்குமதி செய்கிறது.
1947ல் ஏற்பட்ட பிரிவினை இன்னும் முடியவில்லை. தற்போதும் நடக்கிறது. இருப்பிடம் மற்றும் மொழி ஆகியவற்றின் மூலம் மக்கள் மனதில் பிரிவினையை உண்டாக்குகின்றனர். பல சித்தாந்தங்கள் பிரிவினையை ஆதரிக்கிறது. அதில் திராவிட சித்தாந்தமும் ஒன்று.
முன்பு இந்தியாவை ஆண்ட அரசு நமது நிலத்தை ஆக்கிரமித்த அண்டை நாடுகளுக்கு தாரைவார்த்தது. 1960 போரில் இந்தியா இடத்தை சீனாவிடம் தாரைவார்த்தது. அதேபோல் கச்சத்தீவையும் தாரைவார்த்தனர். இதனால் நமது மீனவர்கள் இன்று அண்டை நாட்டு ராணுவத்தால் சுடப்படுகின்றனர்" என தெரிவித்தார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க: ரூ.24.5 கோடி நிதி நிறுவன மோசடி; தேவநாதன் யாதவ் உள்பட மூவருக்கு 14 நாட்கள் நீதிமன்றக் காவல்!