தேனி: தேனியில் தனியார் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்களுடன் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துரையாடினார். நிகழ்ச்சி மேடையில் பேசிய ஆளுநர், நாட்டின் எதிர்காலத் தலைவர்களான மாணவர்களாகிய உங்கள் முன்பு அமர்ந்து இருப்பது பெருமையாக கருதுகிறேன் என்று கூறினார். பின்னர் பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடி, அவர்களது கேள்விக்கு பதில் அளித்தார்.
கிராமப் பகுதியில் இருக்கும் மாணவர்களுக்கு, பல்வேறு துறைகளில் வளர்ச்சி அடைய தொழில்நுட்பம் மட்டும் போதுமா என்ற மாணவியின் கேள்விக்கு பதில் அளித்த ஆளுநர், “தொழில்நுட்பம் மட்டும் போதாது. உலகத்தில் பல்வேறு பகுதியில் என்ன நடக்கிறது என்பது குறித்து கிராமப் பகுதியில் இருப்பவர்களுக்கு தொழில்நுட்பத்தின் மூலம்தான் தெரிய வருகிறது. அதை தேவைக்கு மட்டும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அளவுக்கு மீறினால் அது உங்களை அழித்துவிடும்.
வாய்ப்புகள் உங்கள் வழியில் வரும்போது, அதனை நீங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நீங்கள் உங்களை தயார்ப்படுத்திக் கொண்டால், வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். வாய்ப்புகள் வருவதை நீங்கள் உருவாக்க வேண்டும். தவறவிட்ட வாய்ப்புகளை நினைத்து கவலைப்பட தேவை இல்லை. நான் மிகவும் கிராமப் பகுதியில் இருந்து வந்தவன். என் கிராமத்தில் 12ஆம் வகுப்பு வரைதான் இருந்தது. எங்கள் கிராமத்தில் இரவு நேரத்தில் மின்சார வசதி கூட இருக்காது.
மொட்டை மாடியில்தான் படுத்திருப்பேன். வானில் இருக்கும் நட்சத்திரங்களைப் பார்த்து கனவு காண்பேன். நீங்கள் தொடர்ந்து உழைத்துக் கொண்டிருந்தால், வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். கதைகள் கொண்ட புத்தகங்களை மாணவர்கள் அதிகம் படிப்பதாகத் தெரிகிறது. அது தவறில்லை. ஆனால், உங்களை வளர்த்துக் கொள்ள காந்தி குறித்த புத்தகங்கள் மற்றும் வாழ்வில் சாதித்தவர்கள் குறித்த புத்தகங்களைப் படியுங்கள்” என்று அறிவுரை வழங்கினார்.
பள்ளியில் மாணவர்களுடனான கலந்துரையாடலுக்குப் பிறகு, தேனி காமாச்சிபுரத்தில் விவசாயப் பெண் தொழிலாளர்கள் மற்றும் பெண் தொழில்முனைவோர் கலந்து கொள்ளும் மாநில அளவிலான கருத்தரங்கில், பகல் 12.30 மணிக்கு கலந்து கொண்டார். அதனைத் தொடர்ந்து, பிற்பகல் 2.30 மணியளவில் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் திராட்சை ஆராய்ச்சி நிலையத்தைப் பார்வையிட்டார். ஆளுநரின் வருகையை முன்னிட்டு தேனியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
இதனிடையே, தேனி மாவட்டத்திற்கு வந்த தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியைக் கண்டித்து திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகள் கருப்புக்கொடி காட்டி போராட்டம் நடத்தினர்.
இதையும் படிங்க: "முன்னாடியே சாப்பிட்டது தவறா..?" புதுக்கோட்டையில் தொடரும் சாதிய தாக்குதல்.. பொதுமக்கள் சாலை மறியல்!