சென்னை: தொடக்கக் கல்வித் துறையின் தற்போதைய அரசாணை 243இன் விதிப்படி தொடக்கக் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் ,தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஆகியோருக்கு மாநில அளவில் முன்னுரிமை பட்டியல் தயார் செய்து, வெளியிடப்பட்ட நிலையில், இந்தப் பட்டியல் அடிப்படையில் தொடக்கக் கல்வித் துறையில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு ஜூலை 3ஆம் தேதி முதல் கலந்தாய்வு நடத்த கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கு தமிழ்நாடு தொடக்கக் கல்வித் ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு( டிட்டோ ஜாக்)சார்பில் எதிர்ப்பு இருந்து வந்த நிலையில், பல ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டு வந்தன. இந்த தரப்பினர் தொடக்கக் கல்வித் துறையின் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் ,தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஆகியோருக்கு ஒன்றியம் அளவில் முன்னுரிமை தர வலியுறுத்தி போராடி வந்தனர். ஆனால் அரசாணை 243இன் கீழ் மாநில அளவில் முன்னுரிமை பட்டியல் வெளியிடப்பட்டது.
இது ஒருப்புறம் இருக்க, அரசாணை 243ஐ ஆதரிக்கும் அரசாணை 243 பாதுகாப்பு கூட்ட இயக்கம் சார்பில் இன்று தொடக்க கல்வித்துறை இயக்குனரை நேரில் சந்தித்து நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவிக்கு பட்டதாரி ஆசிரியர்கள் இல்லாவிட்டால், இடைநிலை ஆசிரியர்களை பதவி உயர்வு அளித்து நியமிக்கும் திருத்தம் கொண்டு வர வேண்டும் என தொடக்க கல்வித்துறை இயக்குனர்க்கு மனு தாக்கல் செய்துள்ளனர்.
இதுக்குறித்து அந்த இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தியாகராஜன் கூறுகையில், “ தொடக்கக் கல்வித் துறையில் பணியாற்றி வந்த பட்டதாரி ஆசிரியர்களுக்கு அரசாணை 245 அடிப்படையில் 19 ஆண்டுகளுக்குப் பிறகு தலைமை ஆசிரியர் பதவி உயர்வு வழங்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது சிறப்பான அறிவிப்பு. அதேபோல் தொடக்க கல்வித் துறையில் பணிபுரியும் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள், தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அரசாணை 243 படி மாநில அளவில் முன்னுரிமை நிர்ணயம் செய்யப்பட்டு, ஜூலை 3ஆம் தேதி முதல் கலந்தாய்வு நடைபெற உள்ளது. மேலும் இந்த கலந்தாய்வால் ஒன்றியத்தில் இருக்கும் ஆசிரியர்கள் வேறு ஒன்றிங்களுக்கும் மாவட்டங்களுக்கும் மாநில அளவிலும் பணியிட மாறுதல் பெற முடியும். ஒரு சிலர் கூறுவது போல் ஆசிரியர்களை வேறு இடங்களுக்கு பணியிட மாற்றம் செய்யப்படமாட்டார்கள்.
ஆசிரியர்கள் விருப்பப்பட்டால் தாங்கள் விரும்பும் ஊர்களுக்கு பணியிடமாறுதல் பெற்றுச் செல்லலாம். எனவே இந்த அரசாணை 243 அடிப்படையில் கலந்தாய்விற்கு 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் விண்ணப்பித்துள்ளனர். கலந்தாய்வு நடந்து முடிந்த பின்னர் இதன் பலன் தெரிய வரும். இந்நிலையில் நாங்கள் அரசாணை 243யில் சில மாற்றங்கள் செய்ய கோரி ஏற்கனவே வலியுறுத்தியபடி, இன்று நாங்கள் நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்களுக்கு பட்டதாரி ஆசிரியர்கள் இல்லாவிட்டால், இடைநிலை ஆசிரியர்களை பதவி உயர்வு மூலம் நியமனம் செய்ய வேண்டும் என்ற திருத்தத்தை அரசாணையில் மேற்க்கொள்ளுமாறு தொடக்க கல்வித் துறைக்கு மனுத்தாக்கல் செய்துள்ளோம்” என்றார்.
இதையும் படிங்க: கல்வி விருது விழாவில் விஜய் பேசிய அரசியல் என்ன?