சென்னை: தமிழ்நாடு அரசு தனது தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதியின்படி பழைய ஓய்வூதிய திட்டத்தினை அமல்படுத்துவது, ரூ.15 ஆயிரத்திற்குக் குறைவாக ஊதியம் வாங்கும் இடைநிலை மற்றும் முதுநிலை ஆசிரியர்களுக்கிடையேயான ஊதிய முரண்பாட்டைக் களைவது, தலைமைச்செயலகம் முதல் அனைத்து துறைகளிலும் உள்ள அனைத்து பிரிவு காலிப்பணியிடங்களையும் நிரப்புவது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு நாளை (பிப்.15) ஒரு நாள் அடையாள வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளது.
ஏற்கனவே ஜாக்டோ ஜியோ அமைப்பினர் போராட்டம் அறிவித்திருந்த நிலையில் இன்று (பிப்.14) முதலமைச்சர் ஸ்டாலின் உடனான சந்திப்பிற்குப் பின்னர் உடன்பாடு ஏற்பட்டதால் போராட்டத்தைத் திரும்பப்பெற்றனர். இந்நிலையில் இன்று மாலை நடைபெற்ற தமிழ்நாடு அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் காணொளி கூட்டத்திற்குப் பின்னர் நாளை திட்டமிட்டபடி போராட்டம் நடைபெறும் என கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.
தமிழ்நாடு அனைத்து அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சிப் பணியாளர்கள் கூட்டமைப்பின் கூட்டம் இன்று மாலை 6.00 மணிக்குத் தலைமை ஒருங்கிணைப்பாளர் ந.ரெங்கராஜன் தலைமையில் காணொளி வாயிலாக நடைபெற்றது. இந்த காணொளி கூட்டத்தில் மாநிலத் தலைமை ஒருங்கிணைப்பாளர்கள், மாநில ஒருங்கிணைப்பாளர்கள், மாநில இணை ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில், “தமிழக அமைச்சர்கள் முன்னிலையில் நேற்றைய (பிப்.13) தினம் சம்பிரதாய பூர்வமாக நடத்திய பேச்சு வார்த்தை, நேற்றைய நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் அவர்களது உண்மை நிலைக்கு மாறான அறிக்கை, இவற்றைத் தொடர்ந்து இன்றைய தினம் மற்றொரு கூட்டமைப்பு போராட்டத்தை விலக்கிக் கொண்ட சூழல், ஆகிய அனைத்து அம்சங்களும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது.
அரசு அலுவலர்கள் ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சிப் பணியாளர்களின் கோரிக்கைகளை நிதி நிலையைக் காரணம் காட்டி அரசு ஏற்க மறுக்கும் போக்கினை கூட்டமைப்பு கண்டிப்பதுடன், ஏற்கனவே பிப்ரவரி 7ஆம் தேதி கூட்டமைப்பு கூட்டத்தில் எடுக்கப்பட்ட போராட்ட அறிவிப்பின் அடிப்படையில், பிப்ரவரி 15, ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டம் திட்டமிட்டபடி நடைபெறும்” என மாநிலத் தலைமை ஒருங்கிணைப்பாளர் மற்றும் கூட்டத் தலைவர் ரெங்கராஜன் தெரிவித்துள்ளார்.