ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம் பூட்டுத்தாக்கில் உள்ள சி.எம்.சி மருத்துவமனை கிளையில் பீகார் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ஸ்ரீமங்கள் பாண்டே மற்றும் சி.எம்.சி இயக்குநர் விக்ரம் மேத்யூஸ் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர்.
அவர்கள் கூறுகையில், "பீகார் மாநில அரசு, வேலூர் கிறிஸ்தவ மருத்துவ கல்லூரி மருத்துவமனையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டு உள்ளது. பீகாரில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு தலசீமியா நோய் பாதிக்கப்பட்டோர் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அடையாளம் கண்டறியப்பட்டு உள்ளனர்.
தலசிமியா நோயால் பாதிக்கப்பட்டு உள்ள 52 நபர்களுக்கு ஹீமடோபாய்டிக் மற்றும் ஸ்டெம் செல் மாற்று அறுவை சிகிச்சை வழங்க ஒரு நபருக்கு 15 லட்சம் வீதம் முழு செலவையும் பீகார் அரசு ஏற்றுக்கொண்டு 13 சிறுவர்கள் உட்பட 52 நபர்கள் விமானம் மூலம் அழைத்து வரப்பட்டு சி.எம்.சி ராணிப்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அதில் 13 பேருக்கு நேற்று சிகிச்சை துவங்கியது.
இதையும் படிங்க: தலசீமியாவால் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு முதல் எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை! - கர்நாடக மருத்துவமனை சாதனை! - Bone marrow transplant for boy
அவர்களுக்கு ரூமட்டாலஜி துறையின் மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கின்றனர். அதற்கான தொகை 3 கோடி ரூபாயை முதற்கட்ட தவணையாக செலுத்தினார்கள். மேலும் 194 பேருக்கு ஸ்டெம் செல் பொருந்துகிறது. அவர்களுக்கும் விரைவில் சிகிச்சை அளிக்கப்பட உள்ளது. இந்தியாவிலேயே தலசீமியா நோய்க்கு பீகார் அரசே முழு செலவையும் ஏற்று சிகிச்சையளிப்பது குறிப்பிடத்தக்கது. இதற்காக பீகார் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மங்கள் பாண்டே நேரில் வந்துள்ளார்.
அடையாளம் காணப்பட்ட நோயாளிகள் ஆரோக்கியமாக வாழவும், புது சமுதாயத்தை உருவாக்கவும், பீகார் அரசு இந்த முயற்சியை செய்துள்ளது. இந்த நோயை கண்டறிய பீகார் மாநிலத்தில் 6 மையங்கள் அமைக்கப்பட்டு நோயாளிகளை அடையாளம் கண்டறிந்து வருகிறோம்” என்று கூறினர்.