சென்னை: மலேசிய நாட்டிலிருந்து சென்னைக்கு வரும் பயணிகள் விமானத்தில் பெரிய அளவில் தங்கம், இ-சிகரெட்டுகள், ஐபோன்கள் கடத்திக் கொண்டு வரப்படுவதாக சென்னை மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, மத்திய வருவாய் புலனாய் துறை அதிகாரிகள் நேற்று முன் தினம் இரவு சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்து, தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது, மலேசிய நாட்டுத் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து, தனியார் பயணிகள் விமானம் ஒன்று சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அந்த விமானத்தில், சென்னையைச் சேர்ந்த 4 பேர் ஒரு குழுவாக மலேசிய நாட்டிற்கு சுற்றுலா பயணிகளாக சென்று விட்டு திரும்பி வந்தனர்.
இந்த 4 பயணிகள் மீதும், மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து, மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் 4 பயணிகளையும் நிறுத்தி விசாரித்தனர். அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசினர். இதையடுத்து அவர்கள் உடமைகளை திறந்து பார்த்து சோதனை நடத்தினார்கள்.
இதையும் படிங்க: பெண்கள் மன உளைச்சலில் இருந்தால்.. அமைச்சர் பி.கீதாஜீவன் வெளியிட்ட முக்கிய தகவல்!
அவர்கள் உடமைக்குள், தங்க நாணயங்கள், தங்க செயின்கள் மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். மேலும் 3,220 இ-சிகரெட்கள், ஐபோன்கள் போன்றவைகளும் கடத்திக் கொண்டு வரப்பட்டிருந்தன. அவைகளையும் மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இந்த 4 பயணிகளிடம் இருந்தும், பறிமுதல் செய்யப்பட்ட 700 கிராம் தங்கம், இ- சிகரெட்டுகள், ஐ போன்கள் ஆகியவற்றின் மொத்த சர்வதேச மதிப்பு ரூ. 1.02 கோடி ஆகும்.
இதையடுத்து மத்திய வருவாய் புலனாய் துறை அதிகாரிகள் இந்த கைப்பற்றப்பட்ட பொருட்கள், கடத்தல் பயணிகள் 4 பேர் ஆகியோரை சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைத்து மேல் நடவடிக்கை எடுக்கும்படி அறிவுறுத்தி உள்ளனர்.