திருநெல்வேலி: செய்துங்கநல்லூர் ரயில் நிலையத்தில் இருந்து நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்துக்கு இன்று காலை 11 மணிக்குச் சரக்கு பெட்டக ரயில் ஒன்று புறப்பட்டது. ரயில் நெல்லை மேலப்பாளையம் குறிச்சி பகுதிக்கு வரும் போது மற்றொரு ரயிலில் அடிபட்ட எருமை மாடு ஒன்று தண்டவாளத்தின் நடுவில் இறந்து கிடந்துள்ளது.
இதை கவனித்த சரக்கு ரயில் பைலட் சாதுர்யமாக செயல்பட்டு ரயிலை சுமார் 100 அடிக்கு முன் நிறுத்தியுள்ளார். பின்னர், மாட்டை அப்புறப்படுத்த முயன்றபோது மாட்டின் எடை அதிகமாக இருந்ததால் தூக்க முடியாமல் இருந்த நிலையில் உடனே நெல்லை சந்திப்பு ரயில் நிலைய அதிகாரிகளுக்குத் தகவல் அளித்துள்ளார்.
இதற்கிடையில் ரயில் வருவதால் வழக்கம் போல குறிச்சி ரயில்வே கேட் மூடப்பட்டது. அப்போது, ரயில் நீண்ட நேரமாக நின்று கொண்டிருந்ததால் அதன் நிலையை அறிய கேட்டில் இருந்த இளைஞர்கள் சிலர் நடந்து சென்று பார்த்தபோது எருமை மாடு ஒன்று அடிபட்டு இறந்து கிடந்தது தெரியவந்தது.
இதனை அடுத்து, இளைஞர்கள் மற்றும் ரயில்வே பைலட் இணைந்து எருமை மாட்டினை தண்டவாளத்தில் இருந்து அப்புறப்படுத்தினர். அதன் பின்னர் மீண்டும் ரயிலை ரயில்வே லோகோ பைலட் இயக்கிய போது உதவிக்கு வந்த இளைஞர்களை ரயிலில் ஏற்றி ஒரு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கேட்டில் இறக்கி விட்டுச் சென்றார்.
அதுவரை ரயில் நிலையத்தில் இருந்து அதிகாரிகள் யாரும் இந்த பகுதிக்கு வரவில்லை என கூறப்படுகிறது. ரயில்வே பைலெட்டுக்கு உதவிய இளைஞர்களுக்கு ரயிலில் லிப்ட் கொடுத்த சம்பவம் அங்கிருந்த பொதுமக்களிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: கோவைக்கு பிரதமர் மோடி வரவிருக்கும் நிலையில் தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்!