திருநெல்வேலி : திருநெல்வேலி கங்கைகொண்டான் ரயில் நிலையத்தில் கண்டெய்னர் மூலம் சரக்குகள் அனுப்பப்படும் பெட்டக போக்குவரத்து துவங்கப்பட்டுள்ளது. கங்கைகொண்டான் சிப்காட்டில் தயாராகும் சோலார் பேனல்கள் பெட்டக ரயில்கள் மூலம் அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கங்கைகொண்டான் ரயில் நிலையத்திலிருந்து 3.5 கி.மீ. தூரத்தில் உள்ள சிப்காட்டில் டாடா சோலார் பவர் நிறுவனம் பெரிய அளவில் சோலார் பேனல்களை தயாரித்து வருகிறது. இந்த சோலார் பேனல்கள் பெட்டக ரயில்கள் மூலம் அனுப்பப்பட இருக்கிறது. இதன் மூலம் ரயில்வே துறைக்கு கூடுதல் சரக்கு போக்குவரத்து வருமானம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
இதையும் படிங்க : தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லி பயணம்.. மெட்ரோ இரண்டாம் கட்ட திட்டப் பணிகளுக்கு மத்திய அரசு நிதி வழங்குமா? - chennai Metro phase II project
இந்த நிதி ஆண்டில் 3.410 மில்லியன் டன் சோலார் பேனல்கள் பெட்டக ரயில்கள் மூலம் அனுப்பப்பட இருக்கின்றன. இந்த புதிய போக்குவரத்தின் மூலம் மதுரைக் கோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள ரயில் பாதைகள் சரியாக பயன்படுத்த வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
கோடிக்கணக்கான ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட ரயில் பாதைகள், ரயில் நிலையங்கள், சரக்கு ரயில் பெட்டகங்கள் ஆகியவற்றையும் சரியான முறையில் பயன்படுத்த வாய்ப்பு உருவாகியுள்ளது. இந்தப் பகுதியிலும் சோலார் பேனல் செல்லும் பகுதியிலும் சமூக, பொருளாதார, தொழில் வளர்ச்சி ஏற்படும்.
உள்ளூரில் புதிய வேலை வாய்ப்புகள் உருவாகவும், உள்ளூர் தொழிலாளர்களின் பொருளாதார வசதி மேம்படவும் இதன் மூலம் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.