ராணிப்பேட்டை: அரக்கோணம் அடுத்த அன்வர்த்திகான்பேட்டை பகுதியில் உள்ள காமராஜர் தெருவை சேர்ந்தவர் வெண்ணிலா. இவரது கணவர் காவல்துறையில் பணியாற்றி இறந்து விட்டார். இதைத்தொடர்ந்து வெண்ணிலா சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார்.
பிரதமர் மோடி நேற்று (ஜன. 19) தமிழ்நாடு வருவதை முன்னிட்டு பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், அதற்காக வெண்ணிலா போரூரில் உள்ள மகன் வீட்டில் தங்கி இருந்து, அலுவலகம் சென்று பாதுகாப்பு பணிகளை கவனித்துக் கொண்டிருந்துள்ளார். இந்நிலையில் இன்று (ஜன. 20) பணி நேரம் முடிந்து வெண்ணிலா சென்னையிலிருந்து அரக்கோணத்தில் உள்ள வீட்டுக்கு சென்று கொண்டு இருந்து உள்ளார்.
இந்நிலையில் வெண்ணிலாவின் வீட்டில் குரங்குகள் அமர்க்களம் செய்து கொண்டிருந்த நிலையில், பக்கத்து வீட்டை சேர்ந்தவர்கள் அங்கு சென்ற போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர்கள் வெண்ணிலாவுக்கு தகவல் தெரிவித்தனர்.
அவர் விரைந்து சென்று பார்த்த போது வீட்டின் முன்பக்க கிரில் கேட் உடைக்கப்பட்டு, மர்ம நபர்கள் வீட்டின் பின்பக்கமாக சென்று வாஷிங் மெஷின் மீது வைத்திருந்த சாவியை எடுத்து பின்பக்க கதவின் பூட்டை திறந்து கொள்ளையடித்தது தெரிய வந்து உள்ளது. வீட்டின் பீரோவை உடைத்து 2 சவரன் தங்க நகை, அரை கிலோ வெள்ளி பொருட்கள், மற்றும் ரொக்கம் 5 ஆயிரம் ரூபாயை மர்ம நபர்கள் திருடி சென்றதாக கூறப்பட்டு உள்ளது.
இது குறித்து அரக்கோணம் தாலுகா போலீசில் வெண்ணிலா புகார் அளித்துள்ளார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: உயிரிழந்த 4 பேருக்கு மானியத்தில் வீடு! ஊராட்சி தலைவர் பல கோடி மோசடி? 3 மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு