சென்னை: நாட்டினுடைய பாதுகாப்பு, பொருளாதாரத்திற்கு விடை பிரதமர் மோடி மட்டும் தான் என நேற்று (மார்.27) பல்லாவரம் பகுதியில், பிரச்சாரம் மேற்கொண்ட பின் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் பேசியுள்ளார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்றத் தொகுதி தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர் வேணுகோபாலை ஆதரித்து அனகாபுத்தூர், பம்மல், பல்லாவரம் உள்ளிட்ட இடங்களில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார்.
பாஜக, பாமக நிர்வாகிகளுடன் வாகனத்தில் பிரச்சாரம் மேற்கொண்ட போது பொதுமக்களிடையே பேசிய தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன், “ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்றத் தொகுதி தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர் வேணுகோபாலை வெற்றியடையச் செய்தால், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பைப் பெற்றுத்தருவேன். ஸ்ரீபெரும்புதூர் தமாக வேட்பாளருக்குக் காமராஜர், மூப்பனார் உள்ளிட்டோர் ஆசி உள்ளதால் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது” என பேசியுள்ளார்.
அதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய ஜி.கே.வாசன், “தமிழ்நாட்டில் 39 தொகுதியிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களின் வெற்றி பிரகாசமாக உள்ளது. 3வது முறையாக மோடி வெற்றிபெற்று ஆட்சி அமைத்தால், நாட்டின் பொருளாதாரம் உயரும். தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களின் வெற்றியை அறிந்து விட்டதால், திமுக கூட்டணியை சேர்ந்தவர்கள் எங்களை விமர்சனம் செய்து வருகின்றனர். இதற்குத் தேர்தலில் மக்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள்.
தமிழகத்தில் திமுக, அதிமுக கட்சி வேட்பாளர்களே டெபாசிட் இழப்பார்கள், தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களுக்கு அந்த கவலை இல்லை, கடந்த பத்து வருடங்களாக ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் திமுக எம்பி டி.ஆர்.பாலு எந்த முன்னேற்றமும் செய்யாததால், எங்கள் வேட்பாளர்க்கு இந்த முறை வெற்றி உறுதியாகியுள்ளது. நாட்டினுடைய பாதுகாப்பு, பொருளாதாரத்திற்கு விடை பிரதமர் மோடி மட்டும் தான். தலைமை இல்லாமல் வால் மட்டும் ஆடிக்கொண்டிருக்கும் இந்தியா கூட்டணி மீது மக்களுக்கு ஒரு போதும் நம்பிக்கை இல்லை”, என பேசியுள்ளார்.