சென்னை: இந்தியா கூட்டணியின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. எனவே, நாட்டினுடைய பொருளாதார பாதுகாப்பில் அக்கறை கொண்டவர்கள் அனைவரும் பாரதிய ஜனதா தலைமையிலான, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் வரவேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
பாஜக உடன் தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணி அறிவிப்பு குறித்து, கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, “தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி நாடாளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட முடிவு செய்துள்ளது. தமிழ்நாட்டின் கலாச்சாரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் பாரதிய ஜனதாவுடன் இணைந்து செயலாற்றுவதில் தமாகா பெருமை கொள்கிறது.
பாஜக சார்பாக, தமிழ்நாடு பாஜக மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனன், நாளை (பிப்.27) பிரதமர் மோடி கலந்துகொள்ளும் என் மண் என் மக்கள் யாத்திரை நிறைவு விழாவிற்கு அழைப்பு விடுத்துள்ளார். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் என்பதன் அடிப்படையில், நாளை நடைபெறும் நிகழ்ச்சியில் நான் கலந்து கொள்கிறேன்.
பாரதிய ஜனதா கட்சி மூன்றாவது முறையாக ஆட்சி தொடர்ந்தால், பொருளாதார ரீதியாக நாடு நலம் பெறும். பாதுகாப்பு ரீதியாக வலிமை அடையும். இதை கருத்தில் கொண்டே பாஜக அணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி இணைகிறது. மத்திய அரசிடம் இருந்து நல்ல திட்டங்களை பெறவும், செயல்படுத்தவும் தமிழ் மாநில காங்கிரஸ் செயல்படும்.
ஏழை எளிய மக்கள் மற்றும் இளைஞர்கள் பாஜகவுக்கு ஆதரவாக உள்ளனர். பாஜகவின் வெற்றி என்பது உலக அளவில், இந்தியாவை பொருளாதாரத்தில் மூன்றாவது நாடாக மாற்றும். 140 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியா தங்கு தடையின்றி படிப்படியாக அனைத்து துறையிலும் வளர்ந்து கொண்டிருக்கிறது என்றார்.
மேலும், தமிழகத்தில் திமுக அரசு மக்கள் விரோத அரசாக செயல்பட தொடங்கியுள்ளது. பால் விலை, மின்சார கட்டணம், வீட்டு வரி பத்திரப்பதிவு என மக்கள் மீது அவர்கள் ஏற்றிய சுமை அதற்கு எடுத்துக்காட்டு. தமிழகத்தில் பணபலம், ஆட்சி பலம், அதிகார பலத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க கூடிய நிலை ஏற்பட வேண்டும். வளமான தமிழகம், வலிமையான பாரதம் என்பதன் அடிப்படையில், வரும் நாட்களில் தமாக கூட்டணியின் வெற்றிக்கு பாடுபடும்.
மேலும், நாட்டின் மீது அக்கறை கொண்டு, பொருளாதாரத்தை கணக்கில் வைத்து கூட்டணியில் சேர வேண்டும் என தமாக விரும்புகிறது. வரும் நாட்களில் பாஜகவின் கூட்டணி முழுமை பெறும். நாட்டினுடைய பொருளாதார பாதுகாப்பில் அக்கறை கொண்டவர்கள் எல்லோரும் பாஜக கூட்டணியில் வரவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்து பேசிய அவர், சைக்கிள் சின்னம் கிடைக்க வேண்டும் என்பது எங்களது விருப்பம். தமாகா அதிகாரப்பூர்வமாக கிடைக்கக்கூடிய சின்னத்தில் போட்டியிடும். இந்தியா கூட்டணியின் நிலை கவலைக்கிடமாக இருக்கிறது” என விமர்சித்தார்.
இது குறித்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் தமாகா, அதிமுக கூட்டணி உடன் இணைந்து பல்வேறு பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்தோம். பெருந்தலைவர் காமராசர், மக்கள் தலைவர் மூப்பனார் இவர்களது வழியில் அரசியல் பயின்றவன் என்ற காரணத்தினால், நானும், எனது குடும்பத்தினரும் தனிப்பட்ட முறையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து நன்றியைத் தெரிவித்துள்ளோம்” இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளது.
இதையும் படிங்க: அமைச்சர் ஐ.பெரியசாமி மீதான முறைகேடு வழக்கு: உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பும்.. வழக்கின் பின்னணியும்!