திருவண்ணாமலை: கடந்த டிசம்பர் 1 ஆம் தேதி திருவண்ணாமலை அண்ணாமலையார் மலையில் மண் சரிவு ஏற்பட்டு ஏழு பேர் மண்ணில் புதைந்து உயிரிழந்தனர். மேலும் பலத்த மழை காரணமாக அண்ணாமலையார் மலையில் 5க்கும் மேற்பட்ட இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளதால் பக்தர்கள் மலை ஏறி மீது செல்ல முடியாத நிலையே தொடர்வதாக வனத்துறை தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் வரும் டிச.13 ஆம் தேதி திருவண்ணாமலை அண்ணாமலையார் மலையில் கார்த்திகை தீபத் திருவிழா நடைபெறுவதால். மலை ஏற பக்தர்கள் அனுமதிக்கபடுவார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இது குறித்து இன்று ஞாயிற்றுகிழமை (டிச.8) காலை புவியியல் மற்றும் சுரங்க துறை தொழில்நுட்ப வல்லுநர்கள் 8 பேர் கொண்ட குழு அண்ணாமலையார் மலையை ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வு குறித்து பேசிய திருவண்ணாமலை ஆட்சியர் பாஸ்கர பாண்டியன், “நிலச்சரிவு காரணமாக அண்ணாமலையார் மலையில் பாதி அளவு என சுமார் 800 மீட்டர் அளவிற்கு மண் சரிவு ஏற்பட்டு உள்ளது. இது மட்டுமன்றி தீபம் ஏற்றப்படும் அண்ணாமலையார் மலையின் உச்சி பகுதியில் 200 மீட்டர் கீழே சுமார் 100 மீட்டர் தூரத்திற்கு மண் சரிவு ஏற்பட்டுள்ளது.
இதனால், இப்பகுதியில் பாறைகள் ஆங்காங்கே மரத்தில் தொங்கிக் கொண்டு, எப்போது கீழே விழும் என்ற அளவிற்கு ஆபத்தான நிலையில் மலை காணப்படுகிறது. பல்வேறு இடங்களில் புதைகுழிகள் ஏற்பட்டுள்ளன. பெரும் பாதை என்று அழைக்கப்படும் முலைப்பால் தீர்த்தம் வழியாக பக்தர்கள் மலைக்கு செல்லும் பாதையிலும் மண் சரிவு ஏற்பட்டுள்ளது என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: கள்ளர் வெட்டு திருவிழா: பூஜைக்கு அனுமதி வேண்டி போராட்டம்!
குறிப்பாக, கார்த்திகை தீபம் நடைபெறும் டிசம்பர் 13 ஆம் தேதி 2000 பக்தர்களுக்கு மட்டுமே மலையேற அனுமதி என தெரிவித்திருந்தோம். இந்நிலையில், பக்தர்களின் பாதுகாப்பு கருதி மலையின் தன்மை குறித்து புவியியல் மற்றும் சுரங்க துறை தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆய்வு செய்து, தங்களது ஆய்வறிக்கையை அரசுக்கு சமர்ப்பிக்க உள்ளனர்.
அதன் பிறகு தான் டிசம்பர் 13ஆம் தேதி மகா தீபத்தன்று மலையில் பக்தர்களை ஏற அனுமதிக்கலாமா, வேண்டாமா என்பது குறித்து ஆலோசிக்க முடியும். இந்த குழுவில் மண் இயக்கவியல் மற்றும் அடித்தள பொறியியல் துறை பேராசிரியர் பிரேமலதா, புவியியல் மற்றும் சுரங்க துறை மண்டல கூடுதல் இயக்குநர் ஆறுமுக நயினார், புவியியலாளர் ஜெயபால், புவியியல் மற்றும் சுரங்கத் துறை கூடுதல் இயக்குநர் சங்கரராமன் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்” என்று பாஸ்கர பாண்டியன் தெரிவித்தார்.