சேலம்: முள்ளுவாடி கேட் மக்கான் தெருவைச் சேர்ந்தவர் ஜெசீர் உசேன். இவர் வெள்ளி தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவரது தம்பி சதாம் உசேன் கார் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில், நேற்று (பிப்.23) இரவு சதாம் உசேன், தனது வீட்டில் உள்ள பீரோவுக்கு அடியில் அண்ணன் மறைத்து வைத்திருந்த, மதுபாட்டிலை எடுத்துக் கொண்டு, தனது நண்பரான அதே பகுதியைச் சேர்ந்த அசேன் என்ற நபருடன் சேர்ந்து முள்ளுவாடி கேட்டில் உள்ள மதுபான பாருக்கு அருகே மது அருந்தியுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து, சிறிது நேரத்தில் இருவரும் மயங்கி கீழே விழுந்துள்ளனர். அப்போது, பாரில் அவர்கள் அருகே குடித்துக் கொண்டிருந்தவர்கள் அதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். பின்னர், சதாம் மற்றும் அசேன் இருவரையும் தூக்கிப் பார்த்தபோது, இருவரின் வாயில் இருந்து நுரையும், ரத்தமும் வந்துள்ளது. அதனைத் தொடர்ந்து, உடனடியாக இருவரையும் மீட்டு, சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
அங்கு இருவரையும் மருத்துவர்கள் பரிசோதித்தபோது, இருவரும் சயனைடு கலந்த மதுவை குடித்திருப்பது தெரிய வந்துள்ளது. அதன்பின், உடனடியாக இருவரையும் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்த்து சிகிச்சை அளித்துள்ளனர். ஆனால், அசேன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்த தகவல் அறிந்தவுடன், சேலம் டவுன் போலீசார் டாஸ்மாக் கடைக்குச் சென்று விசாரணை செய்துள்ளனர்.
அதில், அவர்கள் இருவரும், அங்குள்ள டாஸ்மாக் கடையிலோ அல்லது பாரிலோ மது வாங்கவில்லை என்பது உறுதியாகியுள்ளது. பின்னர் அரசு மருத்துவமனைக்கு வந்து விசாரணை நடத்தியபோது, சதாமின் அண்ணன் ஜெசீர் உசேனுக்கு கடந்த புதன்கிழமை அவரது மனைவியுடன் தகராறு ஏற்பட்டு, கோபத்தில் அவரது தாய் வீட்டிற்குச் சென்றதாக கூறப்படுகிறது.
அதனால் ஜெசீர் உசேன் மனமுடைந்து காணப்பட்டு உள்ளார். இந்த நிலையில், சயனைடு கலந்த மது பாட்டிலை பீரோவுக்கு அடியில் ஜெசீர் உசேன் மறைத்து வைத்துள்ளார். இந்த மது பாட்டிலைத்தான், சதாம் எடுத்துக் கொண்டு வந்து, தனது நண்பர் அசேனுடன் சேர்ந்து குடித்தது தெரிய வந்துள்ளது.
தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் சதாம் உசேன் சிகிச்சை பெற்று வருகிறார். இதனைத் தொடர்ந்து, வழக்குப் பதிவு செய்த சேலம் டவுன் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.