கோயம்புத்தூர்: கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள சேத்துமடையைச் சேர்ந்தவர் சதீஷ்குமார். இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், இவர் கடந்த 19ஆம் தேதி பொள்ளாச்சி தேர்நிலையம் பகுதியில் உள்ள அவரது வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றதாகக் கூறப்படுகிறது.
இதனை அடுத்து சதீஷ்குமார், பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் இந்த திருட்டுச் சம்பவம் தொடர்பாக புகார் கொடுத்துள்ளார். இதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை தீவிரமாக தேடி வந்துள்ளனர்.
இந்த நிலையில், வீட்டின் வெளியே நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை இரண்டு நபர்கள் லாவகமாக திருடிச் செல்லும் காட்சிகள் சிசிடிவியில் பதிவாகியிருந்தது. இதனை அடிப்படையாகக் கொண்டு கிழக்கு காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இந்த விசாரணையில், தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ஈஸ்வரன் (22), அவரது நண்பர்கள் விஜய ரங்கநாதா (21), பிரதீப் குமார் (24) பரமன் (25) உள்ளிட்ட நான்கு பேர்தான் இந்த திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் என்பது தெரிய வந்துள்ளது.
இதன் பின்னர், அவர்கள் நான்கு பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து இரண்டு இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர். மேலும், இவர்கள் வேறு ஏதேனும் திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டு உள்ளார்களா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: பியூட்டி பார்லரில் புகுந்து தம்பதி மீது கொடூர தாக்குதல்.. இதான் காரணம்! சென்னையில் பரபரப்பு