சென்னை: படூர் புறவழிச் சாலையில் கார் கவிழ்ந்த விபத்தில், இரண்டு மாணவிகள் உட்பட மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், விபத்தில் படுகாயம் அடைந்த இருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி ஒரு மாணவி உயிரிழக்க, உயிரிழப்பு எண்ணிக்கை நான்காக அதிகரித்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், உயிரிழந்த மாணவர்கள் கேளம்பாக்கத்தில் இயங்கி வரும் தனியார் கல்லூரியில் சட்டப்படிப்பு படித்து வந்ததாக தெரியவந்துள்ளது. நேற்று மாலை கல்லூரி முடிந்ததும் 4ஆம் ஆண்டு படிக்கும் மகா ஸ்வேதா (21), பவித்ரா (21), கர்லின் பால் (21), 3ஆம் ஆண்டு படிக்கும் லிங்கேஸ்வரன் (23), சிவா (23) ஆகிய ஐந்து பேரும் ஒரு காரில் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கோவளத்திற்கு சென்றுள்ளனர்.
அங்குள்ள ஓட்டல் ஒன்றில் டீ சாப்பிட்டு விட்டு படூர் புறவழிச்சாலை வழியாக காரில் திரும்பியுள்ளனர். காரை மாணவர் சிவா ஓட்டி வந்ததாக கூறப்படுகிறது. அச்சாலையின் வழியே அதிவேகமாக கார் வந்து கொண்டிருந்தபோது குறுக்கே நாய் ஒன்று வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நாய் மீது மோதாமல் இருப்பதற்காக சிவா காரை இடது புறம் திருப்பிய போது, வேகத்தின் காரணமாக நிலை தடுமாறிய கார், தடுப்பில் மோதி பறந்து சென்று சுக்கு நூறாக நொறுங்கி உள்ளது. இதில் காரில் இருந்த கேளம்பாக்கத்தைச் சேர்ந்த மகா ஸ்வேதா (21), பவித்ரா (21), திருச்சியைச் சேர்ந்த லிங்கேஸ்வரன் (23) ஆகிய மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும், காரை ஓட்டி வந்த சென்னையைச் சேர்ந்த சிவா (23) மற்றும் அந்தமானைச் சேர்ந்த மற்றொரு மாணவி கர்லின் பால் (21) ஆகிய இருவரும் பலத்த காயங்களுடன் அக்கம் பக்கத்தினரால் மீட்க்கப்பட்டு கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையின் அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி அந்தமானைச் சேர்ந்த கர்லின் பால் (21) என்ற மாணவியும் உயிரிழந்தார். இதனிடையே விபத்து குறித்து தகவலறிந்து வந்த கேளம்பாக்கம் போலீசார் உயிரிழந்து கிடந்த மூவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனிடையே பள்ளிக்கரணை போக்குவரத்து இணை ஆணையர் சமய் சிங் மீனா, ஐ.ஜி. மகேஸ்வரி, கேளம்பாக்கம் உதவி ஆணையர் வெங்கடேசன் விபத்து நடந்த இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். காரை ஓட்டி வந்த மாணவர் மது அருந்தி இருந்தாரா என்று விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். மேலும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவர் சிவா சென்னையைச் சேர்ந்த பிரபல பெண் வழக்கறிஞர் ஒருவரின் மகன் என்பதும் தெரியவந்துள்ளது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்