சென்னை: தாம்பரம் அடுத்த கரசங்கால் பகுதியில் வசித்து வருபவர் சங்கர் (35). அவரது மனைவி ஹேமாவதி (32). சங்கர் தனியார் நிறுவனத்தில் உதவி மேலாளராக பணிபுரிந்து வருகிறார். ஹேமாவதி வளையக்கரணை பகுதியில் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வருகிறார்.
இந்த நிலையில், கடந்த மாதம் செப்.7 ஆம் தேதி அன்று விநாயகர் சதுர்த்தி பூஜையை கொண்டாட, காஞ்சிபுரத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு வீட்டுக்கு வந்து பார்த்தபோது, வாசல் கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் உடனடியாக இவர்கள் மணிமங்கலம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
40 லட்சம் மதிப்புள்ள நகை கொள்ளை: அதன் பேரில், சம்பவ நடந்த இடத்திற்கு விரைந்து சென்ற மணிமங்கலம் குற்றப்பிரிவு போலீசார் ஆய்வு மேற்கொண்ட போது, ஆணி பிடுங்கும் கௌபர் மூலமாக வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர் படுக்கை அறையில் உள்ள பீரோவில் இருந்த சுமார் 40 லட்சம் மதிப்புள்ள 50 சவரன் தங்க நகைகளும், வெள்ளி பொருட்களும், ஐந்தாயிரம் ரூபாய் ரொக்க பணம் உள்ளிட்டவை கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிய வந்தது.
உடனே கை ரேகை நிபுணர்களை வரவைத்து ஆய்வு மேற்கொண்ட போது, குற்றவாளியின் கைரேகை கிடைக்காததால் குற்றவாளியை பிடிப்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டது. பின்னர் இக்கொள்ளை சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்தனர்.
இதையும் படிங்க: 'பர்னஸ் ஆயில் பிசினஸ்'..சதுரங்க வேட்டை பாணியில் 24 லட்சம் மோசடி.. குற்றவாளிக்கு கோர்ட் அதிரடி தீர்ப்பு!
காட்டிக் கொடுத்த சிசிடிவி: மேலும், கொள்ளைச் சம்பவம் அரங்கேறிய வீட்டில் சிசிடிவி காட்சிகள் இல்லாததால் அருகில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், இருசக்கர வாகனத்தில் இருவர் செல்வது தெரிய வந்தது. அந்த காட்சிகளை கைப்பற்றி தொடர்ந்து 50க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமரா காட்சிகளை பார்த்த போது வாகனத்தின் பதிவு எண் தெளிவாக தெரிந்தது. அதன்பிறகு வாகனத்தின் பதிவினை வைத்து விசாரித்தபோது, மதுராந்தகம் இந்திரா நகர் பகுதியை சேர்ந்த லோகேஷ்வரன் (23) என்பவரின் வாகனம் என தெரிய வந்தது.
சிறைக்குள் உண்டான நட்பு: அதன் பிறகு லோகேஷை கைது செய்ய மதுராந்தகம் சென்றபோது அவர் இங்கிருந்து வீடு காலி செய்து விட்டு சென்றுவிட்டதாக அக்கம்பக்கத்தினர் தெரிவித்தனர். அதன் பிறகு அவரது தொலைபேசி எண்ணை வாங்கி சிக்னலை ட்ரேஸ் செய்த போது மதுரையில் இருப்பது தெரிய வந்தது. அதன்படி, லோகேஷை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில், ஏற்கனவே லோகேஷ் கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றிய வழக்கில் போலீசாரிடம் சிக்கி சிறைக்குச் சென்ற போது சிறையில் விருகம்பாக்கம் பகுதியில் சேர்ந்த திவாகர் (35) என்பவருடன் நட்பு ஏற்பட்டதாக தெரிவித்தார்.
மேலும், சிறையில் இருந்து வெளியே வந்த பின் கையில் பணம் இல்லாததால், நானும் திவாகரும் சேர்ந்து, கரசங்கால் பகுதியில் தனியாக இருந்த வீட்டில் கொள்ளையடித்ததாக ஒப்புக் கொண்டார்.
பண்டிகை நாட்களில் மட்டுமே கொள்ளை: அத்துடன், தன்னிடம் 15 சவரன் தங்க நகைகளை திவாகர் கொடுத்ததும் அந்த நகைகளை விற்று அந்த பணத்தில் புதிய இருசக்கர வாகனம் ஒன்றை வாங்கியதாகவும், மீதமுள்ள பணத்தில் என் மனைவிக்கு தங்க செயின் வாங்கி கொடுத்ததாகவும் லோகேஷ் தெரிவித்தார். அதன் பிறகு விருகம்பாக்கம் சென்ற போலீசார் திவாகரை கைது விசாரித்தபோது, பண்டிகை நாட்களில் மட்டுமே கொள்ளையடித்து வருவதாகவும், ஒவ்வொரு முறையும் என் மனைவிதான் என்னை கொள்ளையடிக்க சொன்னதாக பகீர் வாக்குமூலம் அளித்தார்.
சொகுசாக வாழ்ந்து வந்தோம்: அதனை தொடர்ந்து, போலீசார் திவாகர் மனைவியான நித்திய ரூபியை (37) கைது செய்தனர். மேலும் நகை விற்பதற்கு உடந்தையாக இருந்த நித்திய ரூபியின் சகோதரியான வளசரவாக்கம் காமராஜ் அவன்யூ பகுதியைச் சேர்ந்த ராதிகா (43) என்பவரையும் கைது செய்து மணிமங்கலம் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். அதில் இருவரும், சொகுசு வாழ்க்கை வாழ கணவனை கொள்ளையடிக்க அனுப்பி வைத்துவிட்டு கொள்ளையடித்து வரும் நகைகளை விற்று பல வருடங்களாக சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்ததாக வாக்குமூலம் அளித்தனர்.
மேலும், கொள்ளையடித்த நகைகளில் திவாகருக்கு கிடைத்த பங்கான 35 சவரன் தங்க நகைகளை விற்று பணமாக்கி இலங்கையில் உள்ள உறவினருக்கு 5 லட்சம் ரூபாய் கொடுத்ததும் விசாரணையில் தெரிய வந்தது.
அதன் பின்னர் திவாகர் மற்றும் லோகேஸ்வரன் இருவரிடம் 32 சவரன் தங்க நகைகளையும் புதிதாக வாங்கிய இருசக்கரம் வாகனம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.