சென்னை: சென்னை அடையாறில் உள்ள இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் 88 வயதான மூதாட்டி சரோஜா. இவர் தனியாக வசித்து வரும் நிலையில், இவருக்கு துணையாக இவரது வீட்டில் கடலூரைச் சேர்ந்த ராஜாமணி என்ற 49 வயது பெண் ஒருவர் அங்கேயே தங்கி வேலை செய்து வந்துள்ளார்.
இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு ராஜாமணி வேலையில் இருந்து நின்றுள்ளார். இதனை அடுத்து, தனியாக வசித்து வரும் மூதாட்டி சரோஜாவின் வீட்டில் நகை இருப்பதை தெரிந்து வைத்திருந்த ராஜாமணி, தனது நண்பர்களுடன் சேர்ந்து, அந்த நகைகளை கொள்ளையடிக்கத் திட்டமிட்டுள்ளார்.
இதன் அடிப்படையில், கடந்த செப்டம்பர் 20ஆம் தேதி, ராஜாமணி மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து மூதாட்டி சரோஜாவின் வீட்டிற்குச் சென்றுள்ளனர். பின்னர் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி சரோஜாவின் முகத்தில் மயக்க மருந்தை தெளித்துவிட்டு, அவர் அணிந்திருந்த நகைகள் உட்பட அவரது வீட்டில் உள்ள 15 சவரன் தங்க நகைகளை மொத்தமாக கொள்ளையடித்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
இந்த நிலையில், மூதாட்டி சரோஜா மயக்கம் தெளிந்து எழுந்து பார்த்தபோது, தான் அணிந்திருந்த நகைகள் உட்பட தனது வீட்டில் இருந்து 15 சவரன் நகைகள் காணாமல் போனதை அறிந்து அதிர்ச்சி அடைந்து, உடனே இது குறித்து திருவான்மியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதையும் படிங்க: சிறுமியை கிண்டல் செய்த இளைஞர்.. தட்டிக் கேட்ட தந்தை கத்தியால் குத்தி கொலை! - புதுக்கோட்டையில் பரபரப்பு!
இந்தப் புகாரின் அடிப்படையில், போலீசார் வழக்குப் பதிவு செய்து சம்பவ இடத்தில் பதிவான சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி வீடு புகுந்து கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட கும்பலை தீவிரமாக தேடிவந்துள்ளனர். இத்தகையச் சூழ்நிலையில், மூதாட்டி சரோஜா வீட்டில் நகைகளை கொள்ளையடித்துச் சென்ற கும்பல் கடலூரில் இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில், தனிப்படை போலீசார் அங்கு விரைந்து சென்றுள்ளனர்.
இதன் தொடர்ச்சியாக, ராஜாமணி அவரது நண்பர்களான மனோகரன் (50), ராஜேஷ் குமார் (40) மற்றும் ராஜேஷ் குமாரின் மனைவி புவனேஸ்வரி ஆகிய நான்கு பேரையும் கைது செய்து, சென்னை அழைத்து வந்து, அவர்களிடம் இந்த கொள்ளைச் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு, அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்த பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்