சென்னை: சென்னையில் நடைபெற்ற ஃபார்முலா 4 கார் பந்தயம் நிறைவடைந்துள்ளது. இந்த பந்தயமானது 5 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. முதல் சுற்று கடந்த 24 மற்றும் 25-ம் தேதிகளில் சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரின் இருங்காட்டு கோட்டையில் நடைபெற்றது.
தொடர்ந்து 2-வது சுற்றுப் போட்டிகள் சென்னையில் நடைபெற்று முடிந்துள்ளது. இதனையடுத்து 3-வது சுற்றுப் போட்டி கோவையில் செப்டம்பர் 13 முதல் 15-ம் தேதி வரை நடைபெறுகிறது. 4-வது மற்றும் 5-வது சுற்றுகள் அக்டோபர், நவம்பர் மாதங்களில் கோவா, கொல்கத்தாவில் நடத்தப்படுகிறது. இறுதியில் 5 சுற்றுகளின் முடிவில் அதிக புள்ளிகளைப் பெறுபவர்கள் சாம்பியன் பட்டத்தை பெறுவார்கள்.
இந்தநிலையில் சென்னையில் நடைபெற்று முடிந்த இரவு நேர ஸ்ட்ரீட் ரேஸ் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பரிசுகளை வழங்கி பாராட்டுகளைத் தெரிவித்தார். இந்த நிகழ்வின் போது அமைச்சர் சேகர்பாபு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை செயலர் அதுல்ய மிஸ்ரா, சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி ஆகியோர் உடனிருந்தனர்.
இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் உதயநிதி கூறுகையில்,"சென்னையில் சிறப்பான ஏற்பாட்டுடன் கார் ரேஸ் நடைபெற்றது. பொதுமக்கள் மிகப்பெரிய ஆதரவு கொடுத்துள்ளனர். அதிகமானோர் கார் ரேஸ் பார்த்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.கார் ரேஸ் நடத்தியது மூலமாக சென்னைக்கு மிகப்பெரிய பெருமை கிடைத்துள்ளது. இதற்காக ஒத்துழைத்த அனைத்து அரசு துறைகளுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "சென்னையில் நடைபெற்ற கார் ரேஸ் தமிழக விளையாட்டுத் துறைக்கு வரலாற்றில் சிறந்த இடமாக இருக்கும் என தெரிவித்தார். இதனையடுத்து 2027 வரை கார் நடப்பதற்கு FIA அனுமதி பெறப்பட்டிருக்கிறது என்ற கேள்விக்கு, கார் ரேஸ் சென்ற வருடமே நடத்த வேண்டியது, புயல் காரணமாக தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது. இனி வரும் வருடங்களில் முதலமைச்சரின் ஆலோசனை பெற்று பொது மக்களிடம் எவ்வளவு வரவேற்பு உள்ளது என்பதெல்லாம் பார்த்து அடுத்த வருடம் நடைபெறுமா என்பதை முடிவு செய்வோம்.
500 பேர் வரை இலவசமாக பார்ப்பதற்கு அனுமதி கொடுத்திருந்தோம், சில பேருக்கு டிக்கெட் கிடைக்காமல் திரும்பிச் சென்றுள்ளனர். நேற்று கால தாமதமாக தொடங்கியதற்குக் காரணம், பாதுகாப்பு முக்கியம் என்பதால் FIA சான்றிதழ் பெறுவதற்கு காலதாமதம் ஏற்பட்டது. முதன்முறையாக உலகத்தரம் வாய்ந்த ரேஸ் நடக்கும் போது சின்ன சின்ன தடங்கல்கள் இருக்கும், ஆனால் திட்டமிட்டபடி நடைபெற்றது எந்த குளறுபடியும் இல்லாமல் சிறப்பாக நடைபெற்றது" என தெரிவித்தார்.
இதையும் படிங்க: புற்றுநோய் சிகிச்சை குழந்தைகளுடன் சூர்யகுமார், ஸ்ரேயாஸ் சந்திப்பு! சர்ப்ரைஸ் ஷாக் கொடுத்த குழந்தைகள்!