தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் நீலகண்ட பிள்ளையார் ஆலயம் அமைந்துள்ளது. மிகவும் பிரசித்தி பெற்ற இந்த ஆலயத்தில் சித்திரை திருவிழா 12 நாள் நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்தாண்டு கடந்த 14ஆம் தேதி காப்புக் கட்டுதலுடன் விழா தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் கடந்த 22ஆம் தேதி நடைபெற்றது.
இந்நிலையில் காவல்துறை கட்டுப்பாட்டு அறை எண் -100 க்கு போன் செய்த மர்ம நபர் பேராவூரணி நீலகண்டப் பிள்ளையார் கோயில் தெப்பக்குளம் அருகே வெடிகுண்டு உள்ளதாக மிரட்டல் விடுத்துள்ளார். இதையடுத்து காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டு, கோயில் மற்றும் தெப்பகுளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போலீசார் தீவிரமாக சோதனை செய்தனர். சோதனையில் வெடிகுண்டுகள் எதுவும் கைப்பற்றப்படவில்லை.
தேரோட்டம் எவ்வித அசம்பாவிதமும் இன்றி அமைதியாக நடந்து முடிந்துள்ளது. இதனை அடுத்து கோயிலுக்கு மிரட்டல் விடுத்த தொலைபேசி எண்ணை காவல்துறையினர் ஆய்வு செய்தனர். காவல்துறையினரின் விசாரணையில் மிரட்டல் விடுத்தவர் மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார் கோயிலை சேர்ந்த சிங்காரவேலு (வயது 35) என்பது தெரிய வந்தது.
இதனையடுத்து அவரை கைது செய்த காவல்துறையினர், அவரிடம் நடத்திய விசாரணையில், கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு, பேராவூரணி பிள்ளையார் கோயில் கும்பாபிஷேகம் நடைபெறுவதற்கு முன்னால், கோயிலில் ஸ்தபதியாக வேலை செய்ததாகவும், தேரோட்ட நிகழ்ச்சியை யூடியூப் சேனல் மூலம் நேரடியாக பார்த்துக் கொண்டிருந்த போது, குடிபோதையில் கட்டுப்பாட்டு அறைக்கு வெடிகுண்டு இருப்பதாக உளறி விட்டதாக கூறியுள்ளார். இதையடுத்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக அவர் மீது பேராவூரணி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, கைது செய்து பேராவூரணி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: உடல் எடையை குறைக்க அறுவை சிகிச்சை செய்த இளைஞர் மரணம்.. புகாரில் கூறப்பட்டுள்ளது என்ன? - Weight Loss Surgery