சென்னை: பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸுக்கு விழுப்புரம் நீதிமன்றம் மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது. இந்த வழக்கில் ராஜேஷ் தாஸை கைது செய்ய இடைக்காலத் தடை விதித்து உச்ச நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது.
இந்த நிலையில், ராஜேஷ் தாஸின் மனைவியும், தமிழக எரிசக்தி துறைச் செயலருமான ஐஏஎஸ் அதிகாரி பீலா, சென்னை கேளம்பாக்கம் அடுத்த தையூர் பகுதியில் பண்ணை பங்களாவில் வசித்து வருகிறார். இந்நிலையில், இவரது பங்களா வீட்டிற்கு கடந்த மே 21ஆம் தேதி அவரது முன்னாள் கணவரும், முன்னாள் சிறப்பு டிஜிபியுமான ராஜேஷ் தாஸ் அத்துமீறி நுழைந்து காவலாளிகளை தாக்கி தகராறில் ஈடுபட்டதாக, பீலா கேளம்பாக்கம் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார்.
இந்தப் புகாரின் அடிப்படையில் கேளம்பாக்கம் போலீசார் ராஜேஷ் தாஸ் மீது அத்துமீறி புகுந்து பிரச்னை ஏற்படுத்துதல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட ஐந்து பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து, இன்று அவரை கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து நான்கு மணி நேரம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
நான்கு மணி நேரம் விசாரணைக்குப் பிறகு ராஜேஷ் தாஸ் நெஞ்சுவலி ஏற்பட்டதாக போலீசாரிடம் தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையில், மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பரிசோதனைக்குப் பிறகு ராஜேஷ் தாஸை போலீசார் திருப்போரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அங்கு, அவரது உடல் நிலையைக் கருத்தில் கொண்டு அவரின் சொந்த ஜாமீனில் விடுவித்து நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.
முன்னதாக, முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸ், தான் வசித்து வரும் வீட்டின் மின் இணைப்பை தன்னை கேட்காமல் பீலா வெங்கடேசன் அதிகாரத்தைப் பயன்படுத்தி துண்டித்து விட்டதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இது குறித்து நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், பீலா வெங்கடேசன் அவரது கணவர் ராஜேஷ் தாஸிடம் விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பீலா வெங்கடேசன் அளித்த புகாரில் முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸ் அதிரடி கைது! - Former DGP Rajesh Das