புதுக்கோட்டை: மின் கட்டண உயர்வு மற்றும் நியாய விலை கடைகளில் வழங்கப்படும் பருப்பு, பாமாயில் ஆகியவற்றை நிறுத்த முயற்சிக்கும் திமுக அரசைக் கண்டித்து புதுக்கோட்டை திலகர் திடலில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 500க்கும் மேற்பட்ட அதிமுகவினர் கலந்து கொண்டனர்.தமிழக அரசுக்கு எதிராகவும், மின்கட்டணத்தை உடனடியாக குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் மருத்துவத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது, "திமுக ஆட்சிப் பொறுப்பு ஏற்ற பின்னர் தற்போது மூன்றாவது முறையாக மின் கட்டணத்தை உயர்த்தியுள்ளதாகவும், இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
அதிமுக அரசு, உதய்(UDAY) மின் திட்டத்தில் கையொப்பம் இட்டதால் தான் மின் கட்டணத்தை உயர்த்தக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக திமுக வீணாகப் பழி சுமத்துகிறது என்று தெரிவித்த அவர், அதிமுக அதில் கையெழுத்திடும் போது மின் கட்டண உயர்வு கூடாது என்ற நிபந்தனையுடன் தான் கையெழுத்திட்டதாகத் தெரிவித்தார். அதை மறைத்துவிட்டு தற்போது திமுகவானது அதிமுக அரசைக் குறை கூறுவதாகத் தெரிவித்தார்.
ஒவ்வொரு ஆண்டும் பருவ மழை காலத்தின் போது வைரஸ் காய்ச்சல்கள் அதிகரித்துக் காணப்படும் என்றும், நிபா வைரஸ் போன்ற காய்ச்சல்கள் அதிக அளவு வருவதற்கு உண்டான வாய்ப்புகள் உள்ளன எனவும் குறிப்பிட்டார். ஏற்கனவே அதிமுக ஆட்சிக்காலத்திலும் நான் சுகாதாரத் துறை அமைச்சராக இருந்தபோது இதுபோன்ற காய்ச்சல்கள் வந்துள்ளதாகத் தெரிவித்த அவர், அப்போது உடனடியாக தடுப்பு நடவடிக்கைகளை எடுத்ததன் விளைவாக இந்த பாதிப்பும் ஏற்படவில்லை எனக் கூறினார்.
தமிழகத்திலும் தற்போது டெங்குகாய்ச்சல் அதிகமாகப் பரவி வருவதாகத் தெரிவித்த அவர், டெங்கு காய்ச்சலால் எவ்வளவு பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், தடுப்பு நடவடிக்கைகள் என்னென்ன எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து அரசு விளக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்து பேசிய அவர், ஜெயலலிதா காலத்திலிருந்து இன்று வரை நீட் எதிர்ப்பு கொள்கையில் அதிமுக உறுதியாக உள்ளதாகத் தெரிவித்தார். நீட் வேண்டாம் என்று கூறியது அதிமுக என்றும், நீட் வேண்டும் என்று கூறி அந்த திட்டத்தை இந்தியாவுக்குள் கொண்டு வந்தது காங்கிரஸ் மற்றும் திமுக அரசு தான் எனக் குற்றம் சாட்டினார். மேலும் தற்போது காங்கிரஸ் மற்றும் திமுகவானது நீட் விவகாரத்தில் இரட்டை வேடம் போடுவதாகத் தெரிவித்தார்.
திமுக நீட் குளறுபடிகள் காரணமாக, தற்போது இந்தியா முழுவதும் உள்ள மாணவ, மாணவிகள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாக வேதனை தெரிவித்த அவர், இதற்குக் காங்கிரஸ் திமுக தான் பொறுப்பேற்க வேண்டும் என்றும், நீட் தேர்வில் முறைகேடுகள் நடப்பது என்பது முற்றிலுமாக களையப்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். மேலும் இந்த விவகாரத்தில் உடனடியாக உச்ச நீதிமன்றம் நிரந்தர தீர்வை தர வேண்டும்" எனத் தெரிவித்தார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: என்னது நீட் ரத்து இல்லையா? மத்திய அமைச்சரின் பதிலுக்கு எம்.பி. சு. வெங்கடேசன் கண்டனம்!