வேலூர்: காட்பாடியில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ரமணா, பெஞ்சமின் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய அவர்கள், “அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மிகப்பெரிய அறிக்கையை கொடுத்துள்ளார். கடந்த மூன்று ஆண்டுகளில் தமிழ்நாடு முழுவதும் மாவட்ட வாரியாக எத்தனை படுகொலைகள் நடைபெற்றுள்ளது எனக் கூறியுள்ளார்.
இதைப் பற்றி பத்திரிகையாளர்களுக்கும், ஊடகங்களுக்கும் நன்றாக தெரியும், கடந்த மூன்று ஆண்டுகளில் இதுவரை இல்லாத அளவிற்கு இந்த ஆட்சிக் காலத்தில் மிக மோசமான சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது. குறிப்பாக, கஞ்சா போதைப் பொருள்கள் கட்டுக்கடங்காமல் சென்று கொண்டிருக்கிறது என்பது தான் நிதர்சனமான உண்மை.
இது போன்று நடக்கும் சம்பவங்களை ஊடகவியலாளர்கள் சொல்ல வேண்டும் என்பதுதான் எங்கள் பொதுச் செயலாளர் ஈபிஎஸ் கருத்து. பின்னர் மின் கட்டண உயர்வுக்கு அதிமுக தான் காரணம் என திமுக குற்றச்சாட்டுகிறது என கேட்டதற்கு, இது எப்படிப்பட்ட பொய், அதிமுக ஆட்சியில் மின் கட்டணத்தை உயர்த்தவில்லை, ஒரு முறை மின் கண்டனத்தை எடப்பாடியார் உயர்த்த வேண்டும் என பேசும் பொழுது அதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஷாக் அடிக்கிறது எனக் கூறினார். இன்றைக்கு என்ன அடிக்கிறது என்று கேள்வி எழுப்பினார்.
இன்றைக்கு ஷாக் அடிக்கவில்லையா? விலைவாசி உயர்வை மக்கள் கண்டு கொள்ளவில்லையா? என கேள்வி எழுப்பினார். இதனையடுத்து, தமிழ்நாட்டில் வளர்ச்சி எப்படி உள்ளது என செய்தியாளர் கேட்ட கேள்விக்கு, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை, மேலும் பல பிரச்னைகள் உள்ளது. உயர்கல்வியில் சரியான முன்னேற்றம் இல்லை, அனைத்து இடத்திலும் திமுக அரசு தொய்வுடன் தான் உள்ளது.
அதிமுகவுடன் இணைவதற்கு யாரிடமும் யாசகம் கேட்கவில்லை எனவும், விரைவில் அதிமுக இணையும் என முரண்பாடாக ஓபிஎஸ் கூறியுள்ளது என கேட்டதற்கு, ஓபிஎஸ் எல்லா நிலைகளிலும் அவரோடு நிலைப்பாட்டை இழந்து, தோல்வியடைந்து இன்று நின்று கொண்டிருக்கிறார்.
அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை எதிர்த்து எப்போது பலாப்பழத்தில் நின்றாரோ, அப்போதே தார்மீக உரிமையை முழுமையாக இழந்துவிட்டார். அதிமுக அலுவலகத்தை உடைத்தது, அதன் பிறகு இரட்டை இலை முடக்குவதற்காக உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் என பல்வேறு நீதிமன்றங்களின் நாடியது என அனைத்து நிலைகளிலும் அதிமுகவிற்கு எதிர்ப்பு நிலை எடுத்து, இன்றைக்கு ஓபிஎஸ் நிராயுதபாணியாக தெருவிலே நின்று கொண்டிருக்கிறார், இதுதான் எதார்த்தமான உண்மை என்றார்.
பின்னர், சசிகலாவின் சுற்றுப்பயணம் அதிமுக இணைப்பிற்கு சாதகமாக இருக்குமா என செய்தியாளர்கள் கேட்டதற்கு, அதிமுக எடப்பாடி பழனிசாமி தலைமையில் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதனால் கட்சிக்குள் எந்தவித பிரச்னையும் இல்லை. குற்றப் பின்னணியில் உள்ளவர்களை ஏற்கனவே கட்சியிலிருந்து நீக்கி இருக்கலாமே, எதற்காக ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஈடுபட்ட பின்னர் அந்தந்த கட்சியினர் நீக்கி உள்ளனர் என்ற கேள்விக்கு, பிரச்னைகள் வரும் போது கட்சித் தலைமை நடவடிக்கை எடுப்பது தொடர்ந்து நடைபெறுகின்ற ஒன்று. அந்த விஷயத்திற்கு அன்றைக்கே உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளார்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: “மாநகராட்சியிலே எங்க தெரு இல்லையாம்.. பாதுகாப்புக்காக இதை செய்றோம்” - மயூரா நகர் மக்கள் கூறுவது என்ன? - Kalinjur residents laid own road