தூத்துக்குடி: அதிமுக கள ஆய்வு பணிகளை கலவரப் பணிகள் என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்ததற்கு, “இது கலவரம் தான். திமுகவை கோட்டையிலிருந்து வீட்டுக்கு விரட்டும் வரை இந்த கலவரம் ஓயாது” என் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ பதில் அளித்துள்ளார்.
தூத்துக்குடி வடக்கு மாவட்ட கள ஆய்வு கூட்டம் நேற்று (நவ.30) சனிக்கிழமை கோவில்பட்டி கிருஷ்ணா நகரில் உள்ள அதிமுக கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், செம்மலை ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு கட்சி உறுப்பினர் சேர்க்கை, வாக்குச்சாவடி முகவர்கள் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டுள்ளனர். மேலும், 2026 இல் சட்டமன்றத் தேர்தலில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் ஆலோசனை வழங்கியுள்ளனர்.
பின்னர் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசியதாவது, “திமுக ஆட்சி மக்களால் வெறுக்கப்படும் ஆட்சியாக உள்ளது. ‘ஸ்டாலின் வருவாரு விடியல் தருவார்’ என்று பாட்டு போட்டு வாக்குறுதி கொடுத்து மக்களை ஏமாற்றியுள்ளனர். திமுக ஆட்சி குறைகளை தற்போது மக்கள் பேச துவங்கியுள்ளனர். அதிமுகவை தேர்தலுக்கு தயாராகும் படி மக்கள் ஆணையிடுகின்றன. திமுகவிற்கு வரும் தேர்தலை கண்டு பயம் வந்துள்ளது. அதிமுக கள ஆய்வு பணிகளை கண்டு திமுக ஆடி போய் உள்ளது.
கலவரப்பணி:
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அதிமுக கள ஆய்வு பணிகளை கலவரப் பணிகள் என்று தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் கள ஆய்வு பணி மேற்கொண்ட துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஆய்வுகளை பாதியிலே முடித்துக் கொண்டு போனது ஏன்? தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி இல்லாமல் ஆய்வு பணி நடத்தியது குறித்து முதலமைச்சர் அதிருப்தியை வெளிப்படுத்தியதை தொடர்ந்து, அவசர அவசரமாக தூத்துக்குடியில் இருந்து விமானத்தைப் பிடித்து சென்றவர் தான் துணை முதலமைச்சர்.
இதையும் படிங்க: அதானி விவகாரம் நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் - கனிமொழி எம்பி!
கலவரம் ஓயாது:
அதிமுகவின் கள ஆய்வுப் பணிகளில் கட்சியினர் பேசுவது கருத்து பரிமாற்றம் என பொதுச்செயலாளர் தெரிவித்துள்ளார். அதிமுக நடத்தும் கள ஆய்வுக் கூட்டத்தினால் அதிமுக புத்துணர்ச்சி பெற்று வருகிறது. இது கலவரம் தான். திமுகவை கோட்டையிலிருந்து வீட்டுக்கு விரட்டும் வரை இந்த கலவரம் ஓயாது. திமுக ஆட்சியில் நிறைகள் இல்லை, குறைகள் மட்டும் தான் உள்ளது” இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பின்னர், கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் பேசுகையில், “2026 தேர்தலில் திமுக எதிர்க்கட்சியாக கூட வரக்கூடாது என்பதுதான் அதிமுகவின் எண்ணம். திமுக ஆட்சிக்கு மக்கள் ஒத்துழைப்பு இல்லை. திமுக ஆட்சி வீண் விளம்பரம், மாயத்தோற்றம். சட்டமன்றத்தில் முதலமைச்சர், அமைச்சர்கள் பொய் சொல்லி வருகின்றனர். திமுக ஆட்சி மீது மக்கள் வெறுப்போடு இருப்பது மட்டுமன்றி கடும் கோபத்திலும் உள்ளனர். மதுரையில் டங்ஸ்டன் திட்டத்திற்கு அனுமதி வழங்கியது திமுக . ஆனால், இன்றைக்கு அதற்கு எதிராக போராடி வருகின்றனர்” என்றார்.
தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் செம்மலை பேசுகையில், “திமுக தொடர்ந்து ஆட்சியில் இருந்த வரலாறு கிடையாது. அது அதிமுகவிற்கு மட்டும்தான் உண்டு. 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுகவை மூன்றாவது இடத்திற்கு தள்ள வேண்டும். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கத்தான் தகுதி. முதலமைச்சராக இருக்க தகுதி இல்லை என்று அரசு ஊழியர் சங்கத்தினர் கூறுகின்றனர்.
கழக பொதுச்செயலாளர் மாண்புமிகு எடப்பாடியார் அவர்களின் ஆணைக்கிணங்க தூத்துக்குடி வடக்கு மாவட்ட கள ஆய்வு கூட்டம் இன்று மாண்புமிகு முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன் மற்றும் செம்மலை ஆகியோர் மேற்பார்வையில் நடைபெற்றது. pic.twitter.com/8vsCMyVnos
— Kadambur Raju - Say No To Drugs & DMK (@Kadamburrajuofl) November 30, 2024
பேருந்து கட்டண உயர்வு, விலைவாசி உயர்வு, சொத்து வரி உயர்வு ,போதைப் பொருட்கள் விற்பனை அதிகரிப்பு, சட்ட ஒழுங்கு சீர்குலைவு போன்ற பிரச்னைகளால் மக்கள் கடும் அதிருப்பதியுடன் உள்ளனர். தேர்தல் காலம் நெருங்க, நெருங்க திமுக கூட்டணி இருக்கும். ஆனால் கட்சிகள் விலக வாய்ப்பு இருக்கிறது” இவ்வாறு அவர் தெரிவித்தார்.