திருநெல்வேலி: நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மரணமடைந்த விவகாரத்தில், நெல்லை மாவட்ட போலீசார் எட்டு தனிப்படைகள் அமைத்து, 4 நாட்களாக தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் ஜெயக்குமார் எழுதிய இரண்டு கடிதங்களில், குறிப்பிடப்பட்டிருந்த 30க்கும் மேற்பட்ட நபர்களுக்கு காவல்துறையினர் சம்மன் அனுப்பினர்.
அதன் அடிப்படையில், முன்னாள் காங்கிரஸ் கமிட்டி தலைவரான கே.வி.தங்கபாலுவுக்கு காவல்துறையினர் சம்மன் அனுப்பினர். அதனைத் தொடர்ந்து, நெல்லை வண்ணாரப்பேட்டையில் உள்ள தனியார் ஹோட்டலில் வைத்து களக்காடு காவல் ஆய்வாளர் கண்ணன் தலைமையிலான போலீசார் தங்கபாலுவிடம் விசாரணை மேற்கொண்டனர்.
முன்னதாக, ஜெயக்குமார் எழுதிய கடிதத்தில் தங்கபாலு கூறியதன் பேரில், தேர்தல் நேரத்தில் ரூ.11 லட்சம் செலவு செய்ததாகவும், அந்த பணத்தை எம்எல்ஏ ரூபி மனோகரனிடம் வாங்கிக் கொள்ளும்படி தங்கபாலு கூறியதாகவும், ஆனால் ரூபி மனோகரன் பணம் தரவில்லை என்று எழுதி இருந்தது குறிப்பிடத்தக்கது.
காவல்துறை விசாரணைக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த தங்கபாலு, "காவல்துறை கேட்ட கேள்விகளுக்கு சரியான பதிலை அளித்துள்ளேன். ஜெயக்குமார் எழுதிய கடிதத்தில் எனக்கு பணம் கொடுத்ததாகவும், அதை பணத்தை ரூபி மனோகரனிடம் பெற்றுக் கொள்ளும்படி கூறியதாக அவர் எழுதியிருந்தது முற்றிலும் பொய்யானது.
தேர்தல் காலகட்டத்தில் கட்சித் தலைமை அல்லது வேட்பாளர்கள் தான் எல்லா செயல்பாடுகளையும், தேவையான நடைமுறைகளையும் மேற்கொள்வார்கள். இது காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமல்ல, எல்லா கட்சிகளுக்கும் பொருந்தும். தமிழக அரசியலில் கடந்த 54 ஆண்டுகளைக் கடந்திருக்கிறேன். யாரும் எனக்கு பணம் கொடுத்ததாகவோ, நான் வாங்கிக் கொண்டதாகவோ இதுவரை என் மீது குற்றச்சாட்டு எதுவும் இல்லை.
மேலும், பணம் வாங்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. தேர்தலின் போது பணம் சம்பந்தமான விவகாரங்களை நான் கவனிக்கவும் இல்லை. தேர்தல் நேரத்தில் கட்சி நிர்வாகிகளை அனைவரையும் ஒருங்கிணைக்க வேண்டிய பணி எனக்கு வழங்கப்பட்டிருந்தது. மேலும், தேர்தல் பணிகளில் இருக்கும் பிரச்னைகளைப் பற்றி வெளியில் பேச முடியாது" எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், "இந்த மரணம் துரதிருஷ்டவசமானது. ஆனால், ஜெயக்குமார் எழுதிய கடிதத்தில் என்னைப் பற்றிய செய்திகள் அனைத்தும் உண்மைக்கு புறம்பானவை. அதை நான் மறுக்கிறேன். அதற்கான எந்த ஆதாரத்தையும் யாரும் காட்ட முடியாது என்பதையும் அழுத்தமாகக் கூறிக் கொள்கிறேன்.
மேலும், எனது வாக்குமூலத்தை கடிதமாக எழுதி காவல்துறையிடம் கொடுத்திருக்கிறேன். மீண்டும் விசாரணைக்கு அழைப்பது குறித்து காவல்துறை என்னிடம் எதுவும் கூறவில்லை. இருப்பினும், எப்போது விசாரணைக்கு அழைத்தாலும் நான் எனது முழு ஒத்துழைப்பை வழங்குவேன்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: "3 ஆண்டு ஆட்சியில் மக்கள் மீது 30 ஆண்டுக்கான சுமை" - ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு!