சென்னை: திமுக சார்பில் ஆண்டுதோறும் செப் 15ம் தேதி அண்ணா பிறந்த நாள், செப்டம்பர் 17ம் தேதி பெரியார் பிறந்த நாள் மற்றும் திமுக தொடங்கப்பட்ட நாள் ஆகியவற்றை இணைத்து முப்பெரும் விழாவாக கொண்டாடப்படுவது வழக்கம்.
அந்த வகையில், இந்தாண்டு திமுக தொடங்கி 75 ஆண்டுகள் நிறைவடைந்ததால், முப்பெரும் விழாவோடு சேர்த்து பவள விழாவும் இன்று (செப் 17) சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த விழாவிற்கு திமுக பொதுச் செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் தலைமையேற்றுள்ளார்.
இந்நிலையில் விழாவின் முதல் வரிசையில் இரண்டு பெரிய இருக்கைகள் போடப்பட்டுள்ளன. ஒன்றில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமர்ந்ததால், மற்றொன்றில் யார் அமருவார் எனக் கேள்வி எழுந்தது. இந்நிலையில் விழா தொடங்கிய நிலையில், மு.க.ஸ்டாலினுக்கு அருகில் உள்ள இருக்கையில் ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் மறைந்த முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதியை அமர வைத்துள்ளனர்.
தொடர்ந்து, ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் அவர் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “பெரியார் வடிவமைத்த கொள்கையை, அண்ணா வகுத்த பாதையை, என்னால் கட்டி காக்கப்பட்ட திடமான இயக்கத்தை ஓங்கி ஒலிக்க செய்து, கம்பீரமாக ஆட்சியில் அமர வைத்திருக்கும் மு.க.ஸ்டாலினை எண்ணி எண்ணி என் மனம் பெருமை கொள்கிறது. ஸ்டாலின் என்றாலே உழைப்பு உழைப்பு, உழைப்பு.
" என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே"
— DMK (@arivalayam) September 17, 2024
கழக பவள விழாவில் ai மூலம் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் உரையாற்றினார்! #பவளவிழாவில்கலைஞர் pic.twitter.com/gKcbwu3a0f
இதையும் படிங்க: சென்னையில் கோலாகலமாக தொடங்கிய திமுக முப்பெரும் விழா மற்றும் பவள விழா! - நேரலை காட்சிகள்
55 ஆண்டுகளாக கட்சிக்காக அயராது உழைத்து, திராவிட செம்மலாய் இந்தியாவில் சிறப்பான முதல்வராக சமத்துவம், சகோதரத்துவம், சமூக நீதி பாதையில் ஆட்சியை சிறப்பாக வழி நடத்துகிறார் ஸ்டாலின். வாழ்க பெரியார், அண்ணாவின் புகழ் ஓங்குக” இவ்வாறு அவர் பேசியுள்ளார்.
இதுதொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன. குறிப்பாக கருணாநிதி பேசியது திமுக தொண்டர்களை மிகுந்த உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. தனக்கே உரிய பாணியில் ”என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே” என்று பேசத் தொடங்கியதும் அனைவரும் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.
இந்த விழாவில் அமைச்சர்கள் பொன்முடி, எ.வ.வேலு, ஐ.பெரியசாமி, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, தா. மோ. அன்பரசன், மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, மதிவேந்தன், பெரிய கருப்பன், ஆர்.காந்தி, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், உதயநிதி ஸ்டாலின், திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா எம்.பி. நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜெகத்ரட்சகன், தயாநிதி மாறன், தமிழச்சி தங்கப்பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.