தஞ்சாவூர்: தமிழக முன்னாள் முதலமைச்சர் மறைந்த ஜெ.ஜெயலலிதாவின் 76ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா பொதுக் கூட்டம், தஞ்சாவூரில் நேற்று (பிப்.24) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சரும், மீனவரணி இணைச் செயலாளருமான கே.ஏ.ஜெயபால் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.
அப்போது பேசிய அவர், “நீட் தேர்வு இந்தியாவில் கொண்டு வருவதற்கு உத்தரவிட்டது காங்கிரஸ் கட்சி. அதற்கு கையெழுத்து போட்டது திமுக. நீட் சீக்ரெட் என்ற அமைப்பு சர்வே எடுத்ததில், 33 மாதத்தில் தமிழ்நாட்டில் திமுக அமைச்சரவையில் 400 சதவீதம் ஊழல் உற்பத்தியாகி உள்ளது.
தமிழகத்தில் 38 எம்பிக்கள் உள்ள திமுக, நாடாளுமன்றத்தில் நீட் தேர்வு ரத்து செய்வதற்கு கேள்வி எழுப்பியது உண்டா? நாடாளுமன்றம் நடைபெறாத அளவிற்கு அவையை ஒத்திவைக்கும் அளவிற்கு ஆர்ப்பாட்டம், போராட்டம் நடைபெற்றதா? மக்களை ஏமாளியாக நினைத்துக் கொண்டு, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சி செய்கிறார்.
மேலும், 22 நாட்கள் நாடாளுமன்றத்தை முடக்கி, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு நடவடிக்கை எடுத்தவர் எடப்பாடி பழனிசாமி. காவிரி ஆற்றில் மேகதாது அணை கட்டப் போகிறோம் என்று சொல்லும்போது அதற்கு எதிர்ப்பும் தெரிவிக்காமல், ஆட்சேபனையும் தெரிவிக்காமல், அமைதியாக வந்த காரணம் என்ன? சட்டமன்றத்தில் எதிர்கட்சித் தலைவர் ஈபிஎஸ் கண்டனத் தீர்மானம் போடச் சொல்கிறார். ஆனால், கண்டனத் தீர்மானம் போடவில்லை.
காவிரியில் தண்ணீர் கிடைக்கவில்லை, நீட் தேர்வைக் கொண்டு வந்தது ஆகியவற்றிற்கு காரணம் திமுகதான். வரலாற்றை மக்கள் மறந்து விடுவார்கள் என்று தான்தோன்றித்தனமாக பொய் பேசுகின்றனர். மக்களுக்கு நிறைய செய்துள்ளதாகக் கூறும் திமுக, 2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணியை விட்டு தனியாக நின்று போட்டியிடட்டும். அதிமுக தனியாக நின்று போட்டியிடும், யார் வெற்றி பெறுவார்கள் என்று பார்ப்போம்" என்று பேசினார்.
இக்கூட்டத்தில் மாவட்டச் செயலாளர் சேகர், முன்னாள் மேயர் சாவித்திரி கோபால், அமைப்புச் செயலாளர் காந்தி, மாநகரச் செயலாளர் சரவணன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: சிறப்பு மாஜிஸ்திரேட் நீதிமன்றம்: தலைமைச் செயலாளர் உள்ளிட்டோர் பதிலளிக்க உத்தரவு!