தென்காசி: தென்காசி மாவட்டம் சிவகிரி வனச்சரக எல்லைக்குட்பட்ட ஒப்பனையாள்புரம் கிராமத்திற்கு அருகே பெரியகுளம் கண்மாய்க்கு அருகில் நாட்டு வெடிகுண்டுகளை வைத்து, காட்டுப் பன்றியை சிலர் வேட்டையாடுவதாக வனத்துறை அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில், வனத்துறை அலுவலகர் மௌனிகா தலைமையிலான அதிகாரிகள் விரைந்து சென்ற சோதனை செய்துள்ளனர்.
இந்நிலையில், அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமாக 3 பேர் சுற்றி திரிந்தது தெரிய வந்துள்ளது. அதனைக் கண்ட வனத்துறை அதிகாரிகள், அவர்களை மடக்கிப் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில், அவர்கள் சங்குபுரம் பகுதியைச் சேர்ந்த கடற்கரை(60), ஒப்பனையாள்புரம் பகுதியைச் சேர்ந்த பால்துரை(37), புளியங்குடி பகுதியைச் சேர்ந்த பெரியமுருகன்(48) என்பதும், இவர்கள் நாட்டு வெடிகுண்டுகளைப் பயன்படுத்திக் காட்டுப் பன்றியை வேட்டையாட வந்ததும் தெரியவந்துள்ளது.
அதுமட்டுமின்றி, அவர்கள் கையில் வைத்திருந்த பையில் மான் கொம்புகள் இருந்ததால், வேட்டையாட வந்த குற்றம் உறுதி செய்யப்பட்டது. ஆகையால், அந்த 3 நபர்களுக்கும் தலா 50 ஆயிரம் வீதம் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் அபராதம் விதித்த வனத்துறை அதிகாரி மௌனிகா, "வன உயிரினங்களை வேட்டையாடுபவர்கள் குறித்து சிவகிரி வனச்சரக அலுவலகத்திற்கு தொலைபேசி மூலம் பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம் என்றும், இனிவரும் காலங்களில் வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்தாலோ, வனவிலங்குகளை வேட்டையாட முற்பட்டாலோ அல்லது வேட்டையாடினாலோ அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என எச்சரிக்கை விடுத்துள்ளார்.