நீலகிரி: நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகம் மசினகுடி அருகே தனியார் பட்டா நிலத்தில் ஆண் காட்டு யானை ஒன்று உடல் நலம் பாதிக்கப்பட்டுப் படுத்துக் கிடந்தது. இந்த தகவல் உடனடியாக வனத்துறையினருக்குத் தெரிவிக்கப்பட்டது.
இத்தகவலறிந்து கால்நடை மருத்துவர்களுடன் விரைந்து வந்த வனத்துறையினர் காட்டு யானைக்குச் சிகிச்சை அளித்தனர். சுமார் 2 மணி நேரமாக யானைக்குச் சிகிச்சை அளித்தனர். பின்பு, யானையை அனைவரும் சேர்ந்து தள்ளி அதனை எழுப்பினர். அப்போது எழுந்த யானை மருத்துவச் சிகிச்சை அளித்த குழுவினரை துரத்தியப் பின் தானாகவே வனப்பகுதிக்குள் ஓடியது. சிகிச்சை அளித்த காட்டு யானையை வனத்துறையினர் தனிக் குழு அமைத்துக் கண்காணித்து வருகின்றனர்.
இதுகுறித்து தமிழ்நாடு வனத்துறை தலைமைச் செயலாளர் சுப்ரியா சாகு தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "முதுமலை புலிகள் சரணாலயத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்ட இளம் யானையை உயிர்ப்பிக்கக் கடுமையாகப் போராடிய குழுவினர்க்குப் பாராட்டுக்கள். சோர்வு மற்றும் நீரிழப்புக்கு அனுபவம் வாய்ந்த கால்நடை மருத்துவர்களால் சிகிச்சை அளிக்கப்பட்டது.
அதன்பின் யானை எழுந்து நின்று சிகிச்சை அளித்த குழுவினரைத் துரத்தி விட்டு மீண்டும் காட்டுக்குள் சென்றது. யானை நடமாட்டத்தை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். முதுமலை வனத்துறை மற்றும் யானைக்குச் சிகிச்சை அளித்த அனைவருக்கும் பாராட்டுக்கள்" என தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பிரியாணி மட்டும் இல்லை... ஹலீமுக்கும் ஃபேமஸ் ஹைதராபாத் தான்! - Hyderabad Is Famous For Haleem