தென்காசி: தமிழக - கேரளா எல்லைப் பகுதியில் உள்ள தோட்டத்திற்குள் முகாமிட்டிருந்த ஒற்றை ஆண் காட்டு யானை மயங்கி விழுந்து உயிரிழந்துள்ள நிலையில், யானையின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. தொடர்ந்து, யானையின் உயிரிழப்புக்கான காரணம் குறித்து வனத்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வனத்துறையின் முதற்கட்ட விசாரணையில், தென்காசி மாவட்டத்தின் தமிழக - கேரள எல்லைப் பகுதியில் உள்ள புளியரை அடுத்த பகவதிபுரம் ரயில் நிலையம் அருகே, கிருஷ்ணன் என்பவருக்குச் சொந்தமான தோட்டத்தில் ஒற்றை ஆண் காட்டு யானை முகாமிட்டிருந்தது. இது குறித்து செங்கோட்டை வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறை அதிகாரிகள், காட்டு யானையை அடர்ந்த காட்டுக்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர்.
ஆனால், எந்த விதமான அச்சுறுத்தலுக்கும் பயப்படாத காட்டு யானை, நின்ற இடத்திலேயே நீண்ட நேரமாக நின்று கொண்டிருந்துள்ளது. இதனால் யானைக்கு உடல் ரீதியான பிரச்னை இருப்பதை உணர்ந்து கொண்ட வனத்துறையினர், கால்நடை மருத்துவக் குழுக்களை வரவழைத்து, அதற்குத் தேவையான மருத்துவ சிகிச்சையை அளித்து வந்துள்ளனர்.
இந்நிலையில், நீண்ட நேரமாக நகராமல் ஒரே இடத்தில் நின்று கொண்டிருந்த யானை திடீரென கீழே விழுந்து காயம் அடைந்த நிலையில், நீண்ட நேரமாக உயிருக்கு போராடிக் கொண்டிருந்துள்ளது. இதனால், யானையை மீட்கும் முயற்சியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டனர். ஆனால், சிகிச்சை பலனின்றி காட்டு யானையானது தற்போது உயிரிழந்துள்ளது.
இதனையடுத்து, வனத்துறையினர் இறந்த யானையின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். தொடர்ந்து, யானையின் உயிரிழப்புக்கு காரணம் என்ன, யானை ஏதேனும் நோய்த்தொற்றுக்கு ஆளாகியுள்ளதா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: வாட்டி வதைக்கும் வெப்பம் எப்போது தணியும்? - பாலச்சந்திரன் கூறிய குட் நியூஸ்! - Tamil Nadu Weather Report