கோயம்புத்தூர்/ திருநெல்வேலி : கோயம்புத்தூர் மற்றும் திருநெல்வேலி வனக்கோட்டத்திற்கு உட்பட்ட வனப்பகுதிகளில் நாளுக்கு நாள் யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வரும் நிலையில், யானைகளின் எண்ணிக்கைகளை கணக்கெடுக்கும் முயற்சியில் மத்திய வனத்துறையினர் ஈடுப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், கோயம்புத்தூர் வனக் கோட்டத்திற்கு உட்பட்ட மதுக்கரை, கோயம்புத்தூர், போளுவாம்பட்டி, காரமடை, பெரியநாயக்கன் பாளையம், மேட்டுப்பாளையம், சிறுமுகை ஆகிய அடர்ந்த வனப்பகுதிகளில் யானைகள் கணக்கெடுக்கும் பணி இன்று தொடங்கியது.
யானைகள் உலாவரும் இடங்கள்: தமிழ்நாட்டில் நீலகிரி, தேனி, நீலாம்பூர், ஆனைமலை என மொத்தம் நான்கு யானைகள் காப்பகம் உள்ளன. இதில் நெல்லை மற்றும் கோயம்புத்தூர் வனக்கோட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் யானைகள் கணக்கெடுக்கும் பணி தொடர்ந்து மூன்று நாட்களுக்கு நடைபெற உள்ளது.
நெல்லையில் அகஸ்திய மலைப் பகுதியில் இருக்கும் சரணாலயத்திலும் கோயம்பத்தூரில் மேட்டுப்பாளையம், சிறுமுகை ஆகிய வனப்பகுதிகளில் காட்டு யானைகளின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகிறது. மேலும், கேரள வனப்பகுதியில் இருந்து வரும் யானைகள், மேட்டுப்பாளையம் கல்லாறு வனப்பகுதிகளை வலசை பாதையாகவும் கொண்டு உள்ளது. இதனால் இந்த வலசைப்பாதை வழியாக யானைகள் இடம்பெயர்ந்து செல்வது அதிகமாகி விட்டது.
கணக்கீட்டு பணியில் அதிகாரிகள்- கோயம்புத்தூர்: திருநெல்வேலி வனத்துறையினர் மற்றும் மத்திய வன உயிரின பயிற்சியகத்தைச் சேர்ந்த ஐந்து உதவி வன பாதுகாவலர்கள் ஒரு குழுக்களாக பிரிந்து மதுக்கரை, தடாகம், ஜக்கனாரி, கல்லாறு, நெல்லி மலை, சுண்டப்பட்டி பிரிவு, கண்டியூர் ஆகிய அடர்ந்த வனப்பகுதிகளில் யானையின் நடமாட்டம் குறித்து இன்று கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அதேபோல், சிறுமுகை வனச்சரக அலுவலர் மனோஜ் தலைமையில் வனத்துறையினர் மற்றும் மத்திய வன உயிரின பயிற்சியகத்தின் ஆறு உதவி வன பாதுகாவலர்கள் ஒரு குழுக்களாக பிரிந்து ஓடந்துறை, கூத்தாமண்டி வடக்கு, தெற்கு, பெத்திக்குட்டை, குஞ்சப்பனை உலியூர் ஆகிய பகுதிகளில் யானையின் நடமாட்டம் குறித்து கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இது குறித்து மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ் கூறுகையில், “இரண்டாவது நாளான வரும் வெள்ளிக்கிழமை யானைகளின் சாணம், சிறுநீர், அதன் கால் தடயங்கள் ஆகியவற்றை வைத்து யானைகள் கணக்கெடுக்கும் பணி தொடங்க உள்ளது. சனிக்கிழமை நீர்நிலையங்களில் யானைகள் கணக்கெடுக்கும் பணி நடைபெற உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி: அம்பாசமுத்திரம் வன கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வரும் மே 23ஆம் தேதி தொடங்கி 25ஆம் தேதி வரை மூன்று நாட்களுக்கு ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுக்கும் பணி நடைபெற உள்ளது. இதில் முண்டந்துறை புலிகள் காப்பக துணை இயக்குனர் மற்றும் வன உயிரின காப்பாளரான இளையராஜா தலைமையில் யானைகள் கணக்கெடுக்கும் பணிகள் தொடங்க உள்ளது.
மேலும், பயிற்சி பெற்ற வனப் பணியாளர்கள் முண்டந்துறை பகுதியில் 15 பிரிவுகளாகவும், பாபநாசம் பகுதியில் 4 பிரிவுகளாகவும், கடையம் பகுதியில் 9 பிரிவுகளாகவும், அம்பாசமுத்திரம் பகுதியில் 9 பிரிவுகள் என மொத்தம் 37 குழுவாக யானைகள் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க: ஹில்குரோவ் ரயில் நிலையத்தை சூறையாடிய காட்டு யானைக் கூட்டம்.. சுற்றுலாப் பயணிகள் பீதி!