சேலம்: டேனிஸ் பேட்டை மேட்டூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட காப்புக் காட்டில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக மக்கள் தெரிவித்துள்ள நிலையில், எலத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார காப்புக்காடு பகுதிகளில் சிறுத்தை நடமாட்டத்தைக் கண்டுபிடிக்க 20 இடங்களில் சிசிடிவி கேமராக்களை வனத்துறையினர் பொருத்தியுள்ளனர்.
சேலம் மாவட்டம், ஓமலூர் அடுத்த டேனிஸ் பேட்டை மேட்டூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட காப்புக் காட்டில் வன விலங்குகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதனால் கிராம பகுதிகளுக்கு வரும் வனவிலங்குகள் ஆடு, மாடு போன்ற விலங்குகளை தாக்கி வந்துள்ளது. இதன் காரணமாக, கிராம மக்கள் இது சிறுத்தையாக இருக்கலாம் என்று அஞ்சியுள்ளனர். மேலும், சிறுத்தையை பார்த்ததாகவும் வனத்துறை அதிகாரிகளிடம் மக்கள் புகார் அளித்துள்ளனர்.
இந்நிலையில், டேனிஸ் பேட்டை எலத்தூர் வனத்தை ஒட்டியுள்ள பகுதியில், ஓய்வு பெற்ற ஆசிரியர் வீட்டில் கட்டி போட்டு இருந்த நாய் ஒன்று கடித்து கொல்லப்பட்டுள்ளது. இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், டேனிஸ் பேட்டை வனத்தில் ஒட்டிய கிராமங்களில் மாவட்ட வன அலுவலர் உத்தரவின் பேரில், வனச்சரகர் தங்கராஜ் தலைமையிலான வன ஊழியர்கள் எச்சரிக்கை அறிவிப்பு வெளியிட்டு வருகின்றனர். குழந்தைகளை தனியாக வெளியில் விட வேண்டாம் என்றும், காட்டுப் பகுதிக்கு பொதுமக்கள் செல்ல வேண்டாம் என்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், சிறுத்தை நடமாட்டத்தைக் கண்டறிய எலத்தூர் மற்றும் சுற்று வட்டார காப்புக்காடு பகுதிகளில் 20 இடங்களில் சிசிடிவி கேமராக்களை வனத்துறை அதிகாரிகள் பொருத்தியுள்ளனர். மேலும், இரண்டு ட்ரோன் கேமராக்களைப பறக்கவிட்டு சிறுத்தை நடமாட்டம் குறித்து கண்காணித்துள்ளனர். ஆனால், இதுவரையில் சிறுத்தை நடமாட்டம் உறுதியாகவில்லை. இருப்பினும், தற்போது அமைந்துள்ள 20 கேமராக்களின் பதிவுகளையும் தொடர்ந்து வனத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.
மேலும், இதுகுறித்து அதிகாரிகள் தெரிவிக்கையில், “டேனிஸ் பேட்டை வனத்தை ஒட்டிய பகுதியில் மர்ம விலங்கு நடமாட்டம் இருக்கிறது. அது சிறுத்தையாக இருக்கலாம் என்பதால் கண்காணித்து வருகிறோம். அதனால், சிறுத்தையைக் கண்டறிய 20 இடங்களில் சிசிடிவி கேமராக்கள் அமைத்துள்ளோம். மக்கள் மத்தியில் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம் ” இவ்வாறு வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: மதுரை சமத்துவ மீன்பிடித் திருவிழா; கொண்டாட்டத்தின் ட்ரோன் காட்சிகள்! - FISHING FESTIVAL IN MADURAI