நாமக்கல்: நாமக்கல் பேருந்து நிலையம் அருகே தனியார் உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு நேற்று (ஏப்ரல் 30) இரவு தேவராயபுரத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் பகவதி என்பவர் உணவருந்திவிட்டு, அவரது வீட்டிற்கு சிக்கன் ரைஸ் பார்சல் வாங்கிச் சென்றுள்ளார். பின்னர் அந்த சிக்கன் ரைஸை வீட்டிலிருந்த அவரது தாய் நித்யா மற்றும் தாத்தா சண்முகம் இருவரும் சாப்பிட்டுள்ளனர்.
ஆனால், உணவருந்திய சிறிது நேரத்திலேயே இருவருக்கும் ஒவ்வாமை ஏற்பட்டு, கடும் வயிற்றுப் போக்கு, வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவரது குடும்பத்தினர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருவரையும் அருகில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு தற்போது அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட ஆட்சியர் உமா, உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளுடன் அந்த உணவகத்தை ஆய்வு மேற்கொண்டார். அப்போது உணவு தயாரிக்கும் இடம் தூய்மையாக இல்லாத காரணத்தால், ஆட்சியர் உடனடியாக அந்த உணவகத்திற்கு பூட்டி சீல் வைக்க உத்தரவிட்டார். மேலும், உணவு மாதிரிகளைச் சேகரித்த உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள், அதை சோதனை செய்வதற்காக ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்தனர்.
இதில் இரண்டு சிக்கன் ரைஸ் பொட்டலத்தில் மட்டும் பூச்சி மருந்து கலந்து இருந்ததாகவும், அதனால் இருவருக்கும் உடல்நலன் குறைவு ஏற்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சராசரியாக நேற்று மட்டும் அந்த உணவகத்தில் 70 முதல் 80 சிக்கன் ரைஸ் விற்பனையான நிலையில், மற்றவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.
இந்நிலையில், உணவு பொட்டலத்தை வாங்கிச் சென்ற பகவதியிடம் நாமக்கல் போலீசார் விசாரணையைத் துவங்கி உள்ளனர். மேலும், உணவகத்தில் உட்கொண்ட இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், உணவகத்தின் உரிமையாளர் ஜீவானந்தத்திடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.