சேலம்: திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே கனிகிலுப்பையைச் சேர்ந்த 6 வயது சிறுமி, கடந்த ஆகஸ்ட் 12ஆம் தேதி வீட்டுக்கு அருகே உள்ள கடையில் ரூ.10 குளிர்பான பாட்டிலை வாங்கி குடித்து, சிறிது நேரத்திலேயே வாயில் நுரை தள்ளி மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதும் உள்ள தனியார் குளிர்பான ஆலைகளிலும், கடைகளிலும் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், சேலம் மாவட்டத்தில் உள்ள அஸ்தம்பட்டி, அம்மாபேட்டை, கொண்டலாம்பட்டி, லைன்மேடு ஆகிய பகுதிகளில் இயங்கி வரும் தனியார் குளிர்பான ஆலைகளில், மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் கதிரவன் தலைமையில் 3 தனியார் ஆலைகளுக்குச் சென்று சோதனை செய்தனர்.
இந்த நிலையில், அஸ்தம்பட்டியில் உள்ள 2 தனியார் குளிர்பான ஆலைகளில் மேற்கொண்ட ஆய்வில் உணவு மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, பரிசோதனைக்காக உணவு பகுப்பாய்வு கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும், சுகாதாரமற்ற முறையில் செயல்பட்டு வந்த குளிர்பான ஆலை உரிமையாளர்களுக்கு நோட்டீஸும் அளிக்கப்பட்டுள்ளது.
தற்போது 5 குளிர்பான ஆலையில் நடத்திய சோதனையில், ஒரு ஆலையில் பாதுகாப்பற்றதாகவும், சுகாதாரமற்றதாகவும் இருந்தது தெரிய வந்துள்ளது. அதையடுத்து, அந்த ஆலையை வேறு இடத்திற்கு மாற்றவும் உத்தரவிடப்பட்டுள்ளது. தொடர்ந்து, 3 ஆலை உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், உணவு மாதிரி ஆய்வு அறிக்கை வந்த பின்னரே, மேல்நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: பத்து ரூபாய் கூல்டிரிங்ஸ் குடித்து உயிரிழந்த சிறுமி; அமைச்சர் விடுத்த எச்சரிக்கை!