விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏவாக இருந்த திமுகவின் நா.புகழேந்தி உடல்நலக்குறைவு பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால், விக்கிரவாண்டி தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு, அங்கு ஜூலை 10ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இதையடுத்து, ஜூன் 10ஆம் தேதி முதல் விக்கிரவாண்டி தொகுதி மட்டுமின்றி, விழுப்புரம் மாவட்டத்தில் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளது. அதனால், தேர்தல் பறக்கும் படையினர் மாவட்டம் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், நேற்று விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் பகுதியில் வந்த சொகுசு காரை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அப்போது, அந்த காரின் டிக்கியில் இருந்த 2 டிராவல் பேக்கில், மேல் பகுதியில் துணிகள் அடுக்கப்பட்டு இருந்தது. இதனையடுத்து, காரில் வந்த நபர்களை அதனை விளக்கும்படி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அந்த துணிகளை விலக்கிய போது, காரில் 500 ரூபாய் நோட்டுகள் கட்டுக் கட்டாக இருந்தது தெரிய வந்துள்ளது.
அதிகாரிகள் இதுகுறித்து காரில் வந்தவர்களிடம் விசாரணை செய்தனர். அதில், டிராவல் பேக்கில் மொத்தமாக ரூ.1 கோடி இருப்பது தெரியவந்தது. அதையடுத்து அந்த பணத்தைப் பறிமுதல் செய்த அதிகாரிகள், உடனடியாக விழுப்புரம் கருவூல அதிகாரியிடம் ஒப்படைத்தனர்.
மேலும் இதுகுறித்து காரில் வந்தவர்களிடம் பணம் எப்படி வந்தது, எதற்கான இவ்வளவு பணத்தை எடுத்துச் செல்கிறீர்கள் பல கோணங்களில் விசாரணை செய்தனர். அப்போது அந்த காரில் இருந்த மருத்துவர் மதன் கோபால் தெரிவிக்கையில், "கோயம்புத்தூரில் தனது தகப்பனார் நிலத்தை விற்று தன்னிடம் ரூ.1 கோடி பணத்தைக் கொடுத்ததாகவும், அதனை தற்போது சென்னைக்கு எடுத்துச் செல்வதாகவும்" தெரிவித்துள்ளார்.
அதைத் தொடர்ந்து, தற்போது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதாகவும், அதனால் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், விழுப்புரம் மாவட்ட ஆட்சியருமான பழனியிடம் இப்பணத்தை ஒப்படைக்க எடுத்துச் செல்ல உள்ளதாகவும் தேர்தல் பறக்கும் படையினர் தெரிவித்தனர். தற்போது, தேர்தல் நேரத்தில் சொகுசு காரில் ரூ.1 கோடி பணம் கட்டுக்கட்டாக பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: நீட் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் தேவை - ராகுல் காந்தி வலியுறுத்தல்..!