கோயம்புத்தூர்: கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் பில்லூர் அணை அமைந்துள்ளது. நீலகிரி மாவட்டம், பில்லூர் அணை நீர் பிடிப்பு பகுதிகள் மற்றும் கேரளாவில் பெய்யும் மழை நீரை ஆதாரமாகக் கொண்டு பில்லூர் அணை கட்டப்பட்டது. அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 100 அடியாகும்.
இந்த நிலையில், கடந்த சில தினங்களாக நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது. நேற்று காலை 6 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்ட உயரம் 94.50 அடியை எட்டியது. அணையில் மின் உற்பத்திக்காக இரண்டு எந்திரங்களை இயக்கியதில் அணையிலிருந்து வினாடிக்கு 6 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேறியது.
இதனால் பவானி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்பட்டது. இந்த நிலையில், நீலகிரி மாவட்டம் அவலாஞ்சி, அப்பர் பவானி, அத்திக்கடவு மற்றும் கேரளாவில் பெய்த தொடர் மழை காரணமாக பில்லூர் அணைக்கு திடீரென தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்பட்டது. அணைக்கு வினாடிக்கு 14 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இதனால் அணையின் நீர்மட்ட உயரம் 97 அடியை எட்டியது.
இதன் காரணமாக, அணையின் பாதுகாப்பு கருதி இன்று அதிகாலை 5.10 மணிக்கு அணையின் நான்கு மதகுகளிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. அணையின் நான்கு மதகுகள் திறக்கப்பட்டதில் வினாடிக்கு 6 ஆயிரத்து 140 கன அடியும் மின் உற்பத்திக்காக அணையில் 2 எந்திரங்களை இயக்கியதில் வினாடிக்கு 6 ஆயிரம் கன அடி தண்ணீர் என அணையில் இருந்து மொத்தம் விநாடிக்கு 12,140 கன அடி தண்ணீர் வெளியேறியது.
அபாய எச்சரிக்கை: இதனால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இதையடுத்து மாவட்ட நிர்வாகம் சார்பில் கரையோரப் பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ஆற்றின் கரையோரப் பகுதியில் தாழ்வான பகுதியில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பு கருதி மேடான பகுதிக்குச் செல்லவும், ஆற்றில் குளிக்கவோ, துணி துவைக்கவோ, மீன் பிடிக்கவோச் செல்ல வேண்டாம் எனவும், பாதுகாப்பு கருதி அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.