சென்னை: சென்னை விமான நிலையத்தின் இணையதள சேவை இன்று பகல் 12 மணியில் இருந்து திடீரென முடங்கியது. இணையதளம் சரியாக வேலை செய்யாமல், மிகவும் தாமதமாக செயல்பட்டதால் விமான பயணிகளுக்கு கம்ப்யூட்டர் மூலம் போர்டிங் பாஸ் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இதை அடுத்து, விமான நிறுவனங்கள் கவுண்டர்களில் கூடுதல் ஊழியர்களை நியமித்து போர்டிங் பாஸ்களை கைகளால் எழுதிக் கொடுத்தனர்.
ஒவ்வொரு பயணிக்கும் போர்டிங் பாஸ் கொடுப்பதற்கு தாமதம் ஆகியதால் பயணிகள் விமானங்களில் ஏறுவதிலும் தாமதம் ஏற்பட்டது. இதனால் சென்னையில் இருந்து மும்பை, லக்னோ, பெங்களூர், மதுரை, திருவனந்தபுரம், பாட்னா, சிலிகுரி, ஹைதராபாத், கோயம்புத்தூர் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட விமானங்கள் சென்னையில் இருந்து சுமார் 2 மணி நேரம் வரை தாமதமாக புறப்பட்டுச் செல்கின்றன.
இதனால் பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். ஆனால், விமானங்கள் திடீர் தாமதங்களுக்கு என்ன காரணம்? எப்போது நிலைமை சீராகும் என்று பயணிகளுக்கு விமான நிறுவனங்கள் முறையான அறிவிப்புகள் எதுவும் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
சென்னை விமான நிலையத்தில் திடீரென ஏற்பட்டுள்ள இந்த இணையதள தொழில்நுட்பக் கோளாறு சீர் செய்யும் பணிகளில் பொறியாளர்கள் குழுவினர் ஈடுபட்டுள்ளனர். அடுத்த ஓரிரு மணி நேரங்களில் இணையதளக் கோளாறு முழுமையாக சீரமைக்கப்பட்டு விமானங்கள் வழக்கம் போல் இயங்கத் தொடங்கும் என்று சென்னை விமான நிலைய அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இதையும் படிங்க: புதிய குற்றவியல் சட்டங்கள் மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது: ஐகோர்ட் அதிருப்தி - Case against new criminal laws